உலக கோப்பை டுவெண்டி20 போட்டிகளுக்கான 30 பேர் கொண்ட ஆரம்ப கட்ட உத்தேச அணியில் யுவராஜ் சிங் இடம்பிடித்துள்ளார்.
டுவெண்டி 20 போட்டிகளுக்கு பொருத்தமான மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார். தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஆடிவரும் அவர் பூரணமாக குணமடைந்து வருகிறார்.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள யுவராஜ் சிங், 3 மணி நேரங்களுக்கு மேல் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை, மூச்சு வாங்குகிறது என கூறியிருந்தார். இருந்தாலும் 20 ஓவர் உலகக் கோப்பைக்குள் தான் அதிகநேரம் விளையாடும் அளவிற்கு தயாராகி விடுவேன். உலககோப்பை டுவெண்டி20 போட்டிகளில் விளையாடும் கனவை நனவாக்குவதே தற்போதைய இலட்சியம் என்கிறார். அவர் இதற்கென தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவருடைய கனவு நனவாகிவருவதற்கு சான்றாக, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் உலக கோப்பை 20 டுவெண்டி போட்டிகளுக்கான இந்திய உத்தேச அணியின் 30 பேர் கொண்ட ஆரம்பகட்ட தெரிவு அணியில் யுவராஜ் சிங்கின் பெயர் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 15 பேர் கொண்ட இறுதி அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கவுள்ளது. ஆகஸ்டு மாதம் நடுப்பகுதியில், புச்சி பாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெறுகிறது. இதில் யுவராஜ் சிங் அதிரடியாக ஆடி தான் மீண்டும் பழைய ஃபோர்மில் இருப்பதாக நிரூபித்தால் நிச்சயம் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் உடற்தகுதி சோதனையிலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதேவேளை ஃபோர்மில் இல்லாததால், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் பெயரும், இந்த உத்தேச பட்டியலில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எல்.பாலாஜி உள்ளிட்ட இரண்டு தமிழக வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.










