இலங்கையில் 37 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையான பெண் பாலியல் தொழிலாளிகள் இருப்பதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட நிபுணர் மருத்துவர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த பெண்களிடம் இருந்து தினமும் சுமார் 80 ஆயிரம் ஆண்கள் பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வறுமை உட்பட பல்வேறு காரணங்களினால் பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் சம்பந்தமான நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல், மார்ச் 31 ஆம் திகதி வரையான காலத்தில், இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்கான ஆயிரத்து 503 பேர் அடையாளம் காணப்பட்டதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் 800 பேர் சிகிச்சைகளுக்காக சமூகமளித்து வருகின்றனர். இலங்கையில் சுமார் 3 ஆயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களில் 90 வீதமானோருக்கு, பாதுகாப்பற்ற உடலறவுகள் காரணமாக அந்த நோய் தொற்றியுள்ளதாகவும் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மூலம் : GTN










