புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71 ஆயிரத்து 498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிவருகிறார்கள்.
கார்த்திக் தொண்டைமானுக்கு ஒரு லட்சத்து 998 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனுக்கு 30 ஆயிரத்து 500 வாக்குகளும் கிடைத்தன. கடந்த முறை நடைபெற்ற சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் டெபாசிட் இழந்திருந்தார். எனினும் இம்முறை தேமுதிக வேட்பாளர் டெபாசிட் இழக்கவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதை அடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.
அதிமுகவுக்கு சாவுமணி : விஜயகாந்த்
இதேவேளை இத்தேர்தல் தோல்வி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவிக்கையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் சூளுரைத்து களம் இறங்கினர். இந்த சுனாமியை எதிர்த்து நமது இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் தங்களது உழைப்பின் மூலம் 30,500 (21.3%) வாக்குகள் பெற்று ஆளும் கட்சியினர்க்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.எந்த எதிர்க்கட்சியும் டெபாசிட் வாங்கக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூக்குரல் எழுப்பினார்.
புதுக்கோட்டை வாக்காள பெருமக்கள் தே.மு.தி.கவிற்கு டெபாசிட் தந்ததோடு மட்டுமல்ல, அதற்கு மேலாக ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடிதான் இந்த தேர்தல்.பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை உயர்த்தி விட்டு, பணத்தை அள்ளிக் கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்ற ஊழல் போக்கிற்கு 30,500 (21.3%) வாக்காளர் பெருமக்கள் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர்.எனது தலைமையிலான ஆட்சி என்றும், ஓராண்டு சாதனை என்றும் மக்கள் வரிப் பணத்தில் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் விளம்பரம் தேடிக்கொண்டார் முதலமைச்சர் ஜெயலலிதா.
இதை கண்டு வெறுப்புக்கும், வேதனைக்கும் ஆளாகிய புதுக்கோட்டை வாக்காளர் பெருமக்கள் இந்த தேர்தலில் இந்த விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் தன்னைத் தவிர வேறு அரசியல் தலைவரோ, தனது கட்சியை தவிர வேறு அரசியல் கட்சியோ இருக்கக் கூடாது என்ற சர்வதிகாரப் போக்கிற்கு புதுக்கோட்டை வாக்காளர் பெருமக்கள் சாவு மணி அடித்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.











