Breaking News
Home / latest-update / யாழ்ப்பாண பொது நூலகத்தின் வரலாறு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com
Public Library, Jaffna

யாழ்ப்பாண பொது நூலகத்தின் வரலாறு

யாழ்ப்பாண பொது நூலகம் ஆரம்பிக்கப்பட்டு 58 ஆண்டுகளாகிறது. 1933ல் K.M. செல்லப்பா என்பவரின் முயற்சியால், முதலில் அவரது இல்லத்திலும் பின்னர் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலும் யாழ்ப்பாண பொது நூலகம் இயங்கத் தொடங்கியது. செல்லப்பா அந்தக் காலத்தில் வெளியான “இந்து சாதனம்” பத்திரிகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பொது நூலகம் நடாத்த நிதியும் புத்தகங்களும் சேர்த்ததாக சொல்லப்படுகிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கியமான நாள் ஜூன் 1, 1981. அந்த நாளில் தான் அரிய புத்தகங்களோடு ஒரு அருமையான நூலகத்தை எரித்தனர் .

மாதம் 25 ரூபாய்கள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிய யாழ்ப்பாண பொது நூலகத்தை 1935ல் யாழ்ப்பாண நகர சபை (Urban council) பொறுப்பேற்றது. 1949ல் யாழ்ப்பாண நகர சபை இலங்கையின் இரண்டாவது மாநகர சபையாக (Municipal council) தரமுயரத்தப்பட, மேயராக பதவியேற்ற சாம் சபாபதி, நூலகத்திற்கென தனியான கட்டிடம் கட்ட வேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்து செயலிலும் இறங்கினார்.





1950களில் மேயர் சாம் சபாபதி மற்றும் புனித பற்றிக் கல்லூரியின் Rector Fr Longன் இணைத்தலைமையில் யாழ்ப்பாண பொது நூலத்திற்கான கட்டிடம் அமைக்க நிதி திரட்டும் முயற்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. கப்பல் மூலம் தனது சொந்த நாடான அயர்லாந்து வரை சென்று நிதி திரட்டினாராம் Fr Long. அமெரிக்க தூதவராலயம் யாழ்ப்பாணத்தில் வைத்திருந்த நூலகத்தை மூடி, நூல்களை யாழ்ப்பாண நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தது. அமெரிக்க அரசும், இந்திய அரசும், கிறிஸ்தவ திருச்சபைகளும், இந்து ஆலயங்களும் நிதிப்பங்களிக்க கட்டிடப் பணிகள் வலு மும்மரகாக நடந்தன.

மார்ச் 29, 1954ல் யாழ் நூலகத்திற்கான அடிக்கல்லை யாழ்ப்பாண மேயர் சாம் சபாபதியோடு Fr Longம் அமெரிக்க, பிரித்தானிய இந்திய உயர்ஸதானிகர்கள் இட்ட நாளில், அமெரிக்க அரசு 22,000 அமெரிக்க டொலர்களை (அன்றைய பெறுமதியில் ரூ 104,000) நன்கொடை செய்ததது. அன்றைய மதராஸ் அரசின் தலைமை கட்டிடக் கலைஞரான VM நரசிம்மன், திராவிட கட்டிட பாரம்பரியத்திற்கமைய வடிவமைத்த கட்டிட வரைபிற்கமைய கட்டப்பட்ட கம்பீரமான யாழ்ப்பாண பொது நூலக கட்டிடம், ஒக்டோபர் 11, 1959ல், அன்றைய யாழ்ப்பாண மேயரான அல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டபோதுதான், முன்வாயிலில் உள்ள சரஸ்வதி சிலையும் நிர்மாணித்தார்கள்.





யாழ்ப்பாண நூலகத்தை சர்வதேச தரத்தில் இயங்க வைக்க, டெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் S.K ரங்கனாதனின் சேவையையும், யாழ்ப்பாண மாநகரசபை பெற்றுக் கொண்டது. நரசிம்மன் வடிவமைத்த கட்டிட வரைபு நான்கு பகுதிகளைக் கொண்டமைந்திருந்ததாம். நடு மைய கட்டிடத்தில் ஒரு குவிமாடத்தையும் (dome) அதன் இரு புறமும் பின்புறமும் இரு மாடிகளையுடைய கட்டிடத் தொகுதிகளையும் உள்ளடக்கியிருந்ததாம். நிதிப் பற்றாக்குறை காரணமாக, முன்புற கிழக்கு மற்றும் மேற்கு கட்டிடத் தொகுதிகளையும், குவிமாடத்தை உள்ளடக்கிய நடு மைய கட்டித்தையும் மட்டும் தற்பொழுது கட்டுவதாக முடிவெடுக்கப்பட்டது. பின்புற மேற்குத் தொகுதி கட்டிடம் கட்டுவதை பிற்போட்டார்கள்.

யாழ்ப்பாண நூலகத்தில் இருந்த அரிய புத்தகங்களுள், 1660ல் Robert Knox எழுதிய History of Ceylon, யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் ராஜநாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம், தமிழில் முதல் முதலாக வெளிவந்த இலக்கிய கலைக்களஞ்சியமான முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிதான கோசம், அதன் பின் வந்த சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி, சித்த வைத்தியம் சம்பந்தமான பனையோலையில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்பன இருந்தன. ஆசியக் கண்டத்திலேயே தலைசிறந்த நூலகங்களில் ஒன்றாக யாழ்ப்பாண நூலகம் திகழ்ந்தது.





யாழ்ப்பாண நூலகம் எரிந்ததை தாங்கொண்ணா அதிர்ச்சியில் Fr டேவிட், கொழும்புத்துறையிலிருந்த அவரது செமின்றியில் மாரடைப்பு வந்து இறந்து போனார். 35ற்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த, உலகப்பிரசித்தி பெற்ற மொழியியல் அறிஞரான தனிநாயகம் அடிகாளரின் ஆராய்ச்சிக் களமாக யாழ்ப்பாண நூலகமே திகழ்ந்தது.

ஜூன் 1, 1981 இல் நூலகம் தீய்கிரையாகியது. எரிந்த நூலகத்தை மீண்டும் உடனடியாக கட்டியெழுப்ப அன்றைய யாழ்ப்பாண மேயரான ராஜா விஸ்வநாதனும் மாநகர சபை ஆணையாளர் CVK சிவஞானமும் களமிறங்கினார்கள். அவர்களோடு ஒட்டு மொத்த தமிழினமும் அணிதிரள கட்டிட கலைஞர் VS துரைராஜா, எரிந்த நூலக கட்டிடத்தை அதே போல் மீண்டும் கட்ட, கட்டிட வரைபுகளை வரைய முன்வந்தார். யாழ்ப்பாண நூலகத்தை மீளக் கட்டுவதில் முன்னின்று உழைத்த இன்னுமொருவர் அன்றைய St Patrick கல்லூரியின் Rectorம், Fr  பிரான்ஸிஸ் சேவியரும் ஆவர்.





பொதுமக்களிடமும் அரசாங்கத்திடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சேகிரிக்கப்பட்ட நிதியுதவியிலும் புத்தகங்களைக் கொண்டும் யாழ் நூலகம் எரிந்த சாம்பலிலிருந்து மீண்டும் புத்துயிர் பெற திட்டங்கள் தயாராகின. எரிந்த கிழக்கு மேற்கு கட்டிடங்களை நினைவுச் சின்னங்களாக பேணிக் கொண்டு, நரசிம்மனின் திட்டத்தில் இருந்த மேற்குப் பகுதி கட்டிடத்தை மையமாகக்கொண்டு, பழைய கட்டிடத்தை போல புதிய கட்டடத்தை கட்டிடக் கலைஞர் துரைராஜா வடிவமைத்தார். புதிய கட்டிட வரைபிலிருந்த ஒரு வித்தியாசம், அது மேற்குப் புறமாக, அதாவது முனியப்பர் கோயில் மற்றும் யாழ் கோட்டையை நோக்கி காங்கேசன்துறை வீதிப் பக்கமாக அமைந்திருந்ததே.

எரிந்த நூலகத்தின் ஓரு பகுதியில், அன்பளிப்பாக கிடைத்த புத்தகங்களைக் கொண்டு, உலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10, 1982ல் நூலகம் மீள இயங்கத் தொடங்கியது.  புதிய கட்டிட வேலைகள் மளமளவென நடந்து, ஜூன் 4, 1984ல் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தால் யாழ்ப்பாண பொது நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது. புதிய கட்டித்தில் மிளிர்ந்த இன்னொரு வித்தியாசம் குவிமாடத்தின் அமைப்பு, யாழ் இசைக்கருவியின் வடிவிலிருந்தது. மீள இயங்கத் தொடங்கிய நூலகத்திற்கு மெல்பேர்ண் தமிழ் சங்கமும் லண்டனிலிருந்து புலம்பெயர் உறவுகளும் புத்தகங்கள் அனுப்பியிருந்தார்கள்.

Check Also

தடுப்பூசி கிடைக்கும் வரை கொரோனா பரவுவதை நிறுத்த முடியாது: தென்னாபிரிக்க அதிபர் தகவல்

கொரோனா தொற்றுடன் வாழப் பழக வேண்டும் என்று தென்னாபிரிக்க அதிபர் சிரில் ரமபோசா மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதிகளவில் தொற்று …

error: Content is protected !!