Breaking News
Home / latest-update / யாழ். தனியார் பஸ் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள்..!! வடக்கு ஆளுனர் தலைமையில் இன்று ஆரம்பம்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ். தனியார் பஸ் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள்..!! வடக்கு ஆளுனர் தலைமையில் இன்று ஆரம்பம்..!

வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும் என்று தனியார் பஸ் துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவையின் அறிமுக நிகழ்வில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

வரையறுக்கப்பட்ட யாழ் தூர சேவை பஸ் உரிமையாளர்களின் நிறுவன அனுசரணையுடன் ஆளுநர் செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் பஸ் உரிமையாளர்களுக்கான பற்றுச்சீட்டு இயந்திரம் ஆளுநரினால் வைபவ ரீதியாக வழங்கப்பட்டன.முதற்கட்டமாக யாழ் தூர சேவை உரிமையாளர்களுக்கும் அடுத்த கட்டமாக வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலுள்ள சங்கங்களின் பஸ் உரிமையாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Qbus எனும் இந்த வலையமைப்பு அறிமுக நிகழ்வில் பருவகால அட்டை மற்றும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு என்பன அறிமுகம் செய்யப்பட்டதுடன் செயற்திறன் மிக்க ஒருங்கிணைக்கப்பட்ட நேரமுகாமைத்துவத்துவம் , கையடக்கதொலைபேசி ஊடாக அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்தல் மற்றும் செயற்படுத்தும் முறைமையுடன் கூடிய பயணிகளுக்கு உயர்திறன் மிக்க பாதுகாப்பான தரமானசேவையை வழங்கல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.இந்தச் சேவையானது முதற்கட்டமாக யாழிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் 42 தனியார் பஸ்களில் நடைமுறைப்படுதப்படவுள்ளன. ஒரு வருடகாலத்தில் இது வடமாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், உள்ளுர் சிற்றூர்திகளிலும் இவை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த பஸ் கண்காணிப்பு கருவியின் மூலம் பஸ் அநாவசியமாக ஒரு தரிப்பிடத்தில் தரித்திருப்பின் அதனை அவதானிக்ககூடியதாகவும் இதன்மூலம் நேரத்திற்கு பயணத்தை மேற்கொள்ளவும் முடியும்.

பஸ் உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் பஸ்ஸின் அன்றைய நாள் வருமானத்தினை கணக்கிடமுடிவதுடன் GPS என்ற கருவி பொருத்தல் மூலம் பஸ்ஸின் சகல நடவடிக்கைகளையும் சங்கமும் உரிமையாளர்களும் கண்காணிக்கமுடியும். அத்துடன் சாரதி நடத்துனர்களின் செயற்பாடுகளும் இதன்மூலம் கண்காணிக்கப்படுகின்றது.மேலும் ஆளுநர் இங்கு குறிப்பிடுகையில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பஸ்பயணத்தின்போது விசேட பஸ் கட்டண கழிவுகள் வழங்கப்படவேண்டும் என்பதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படல்வேண்டும் என்று தெரிவித்தார்.அத்துடன், இந்த செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பயணிகள் பஸ் நடத்துனரிடம் பயணத்திற்கான டிக்கற் மற்றும் மிகுதிப்பணத்திற்கு முரண்படவேண்டியதில்லை. இதன்மூலம் அனைத்து பேரூந்து போக்குவரத்துகளும் ஒழுங்காகவும் நேர்த்தியாவும் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநரின் செயலாளர் , வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் , தனியார் பஸ் சங்கத் தலைவர் மற்றும் வடமாகாண தனியார் பஸ் உரிமயாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Check Also

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய வங்கிகள் இயங்குகிறதா – ஆராய்கிறது மத்திய வங்கி

கொரோனா வைரஸ் பரவலால் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வங்கி சலுகைகள் செயற்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் இலங்கை …