Breaking News
Home / latest-update / குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020

மேஷம்

அஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்தில் இருந்து விடுதலை பெறுகிறீர்கள். இத்தனை நாட்களாக கண்டு வந்த சிரமம் குறைவதோடு குருவின் பார்வை  பலத்தோடு வெற்றி நடை போட உள்ளீர்கள். ஒன்பதாம் வீடு பாக்ய ஸ்தானம் என்பதால் நன்மை தரும் பலன்களையே அனுபவிக்க உள்ளீர்கள். அடுத்து வரும்  ஒரு வருட காலமும் நிதி நிலை எந்தவித சிரமமுமின்றி சீராகச் செல்லும். செலவுகள் உண்டானாலும் அது குடும்பத்தில் உண்டாகும் சுபநிகழ்ச்சிகளைப்  பொறுத்தே அமையும். மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் குடிபுகும். குருவின் பார்வை பலத்தினால் திருமணம், சொந்தவீடு வாங்குவது, புத்திரபாக்கியம் போன்ற  நிகழ்வுகளை வீட்டினில் எதிர்பார்க்கலாம். கடன்பிரச்னைகள் குறையத் தொடங்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி அவர்களுக்குத் தேவையான  உதவியினை செய்வீர்கள். நிலுவையில் இருந்து வரும் வழக்கு விவகாரங்கள் குருவின் பார்வையால் முடிவிற்கு வரும். உடல் ஆரோக்யம் சீரடையும்.  தம்பதியருக்கிடையே அன்யோன்யம் கூடும். குருவுடன் சனி இருந்தாலும் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் எந்தப் பிரச்னையும் உண்டாகாது. மேலும் ராகு:கேதுவின்  சஞ்சார நிலையும் சாதகமாக உள்ளதால் மேஷ ராசிக்காரர்கள் வருகின்ற ஒரு வருட காலத்தை குருவின் திருவருளால் மனநிம்மதியுடன் கழிக்கலாம்.

மாணவர்கள் : கல்விநிலையில் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். இதுநாள் வரை இருந்து வந்த தடைகள் நீங்கி படிப்பினில் நாட்டம் கொள்வீர்கள். அரசுத்  தரப்பில் இருந்து கல்வி உதவித்தொகை கிடைக்கும். அந்நிய தேசம் சென்று உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கூடிவரும்.  நன்றாகப் படிக்கும் நண்பர்களின் ஆலோசனையின் பேரில் உங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். ஆசிரியர்களின் உதவியும், பெருமுயற்சியும்  உங்களுக்கான வளர்ச்சிப்பாதையை வகுத்துத் தரும். குருவின் அருளால் இந்த ஒரு வருட காலம் உங்கள் எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும்  என்பதில் ஐயமில்லை.

பெண்கள் : குடும்பத்தில் உங்களுக்கான பொறுப்புகள் உயரும். கணவர், குழந்தைகளின் வளர்ச்சி என்பது உங்கள் கைகளில் வந்து சேர்ந்துவிடும். எந்த ஒரு  விஷயத்தையும் மேம்போக்காக பார்க்காமல் அதனால் உண்டாகும் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். பொறுப்புகள்  உயர்ந்தாலும் அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குருவின் பார்வை பலம் துணையிருப்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் குடும்பத்தை  முன்னேற்றப் பாதையில்தான் அழைத்துச் செல்லும்.

உத்யோகம் மற்றும் தொழில்நிலை : ஜீவன ஸ்தான அதிபதி சனியுடன் குரு இணைவதால் உத்யோகத்தில் நல்லதொரு வளர்ச்சியினைக் காண்பீர்கள்.  உங்களுக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது உயரதிகாரிகளின் ஆதரவினையும் பெறுவீர்கள். இதனால் அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு  உயரக் காண்பீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டு குரு உத்யோக ரீதியாக வெளிநாடு மற்றும் தொலைதூரப்  பிரயாணத்தினைத் தருவார். இதுபோன்ற வாய்ப்புகளை மறுக்காமல் ஏற்றுக்கொள்வது நல்லது. சுயதொழில் செய்வோருக்கு இருந்து வந்த நிதி நெருக்கடி வருகின்ற  மார்ச் மாதம் முதல் சீரடையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் வளர்ச்சி பெறும். விவசாயம் செய்வோருக்கு அரசு தரப்பில் இருந்து உதவிகள் கிட்டும்.  கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்கள் வளர்ச்சி பெறும். அரசியல்வாதிகள் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார்கள். தொண்டர்கள் தங்கள்  தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு வந்து சேரும். பொதுவாக இந்த ஒரு வருட காலமும் தொழில்நிலை என்பது அபார வளர்ச்சியினைக் காணும்.

பொதுவான நிலை : பொதுவாக இந்த ஒரு வருட காலமும் குருவின் பார்வையினால் நற்பலனே நடைபெறும். நமது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுகிறது  என்கிற மமதையில் இருக்காமல் எதிர்காலம் கருதி சேமிப்பில் ஈடுபட வேண்டியது அவசியம். நல்ல நேரம் நடக்கிறது என்பதற்காக அகலக்கால்  வைத்துவிடாதீர்கள்.

பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள சாய்பாபா ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்யுங்கள். நேரம்  கிடைக்கும்போது ஷீரடி சென்று சாயிநாத ஸ்வாமியை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ள வாழ்வினில் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் நீடித்திருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அஷ்டமத்துச் சனியோடு குருவும் இணைவதை எண்ணி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எட்டாம் வீட்டு குரு சற்று சிரமத்தைத்  தருவார் என்றாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிற்கு அதிபதியே குரு பகவான் என்பதால் நற்பலன்களே கிட்டும். அஷ்டமத்துச் சனியினால் உண்டாகும்  கஷ்டங்கள் குறையத் தொடங்கும். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையத் தொடங்கும். எந்த  ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். குறிப்பாக  குழந்தைகளின் கல்வி நிலை, திருமண விவகாரங்கள், புதிய சொத்து வாங்குதல் போன்ற முக்கியமான விவகாரங்களில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு  செயல்பட்டால் இவை அனைத்திலும் ஏமாற்றம் உண்டாகலாம். உதாரணத்திற்கு பிள்ளையின் உயர்கல்விக்காக கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனமும்,  எச்சரிக்கையும் அவசியம் தேவை. இதேபோன்று பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுதல் அல்லது பிள்ளைக்கு பெண் தேடுதலிலும் மிகுந்த நிதானத்துடன்  செயல்படுங்கள். சொத்து வாங்கும்போது அதில் இருக்கும் வில்லங்கங்களில் கவனம் செலுத்துங்கள். செலவுகள் அதிகமானாலும் அதற்கேற்ற வருமானத்தையும்  காண்பீர்கள். எளிதில் முடிந்துவிடும் என்று அலட்சியமாக இருக்கும் விவகாரங்களில் பெரிய தடைகளைக் காண நேரிடும். விடாமுயற்சி ஒன்றே வெற்றியைத்  தரும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

மாணவர்கள் : அதிகமாக உழைக்க வேண்டிய நேரம் இது. பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற போராட வேண்டியிருக்கும். வெளிநாடு செல்ல  விரும்பும் மாணவர்களின் முயற்சிகளில் தடை உண்டாகும். நண்பர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் கவனத்துடன் இருக்க  வேண்டியது நல்லது. வீண்பழியால் எதிர்கால வளர்ச்சியில் தடை உண்டாகலாம் என்பதை நினைவில் கொண்டு தேர்வு நேரத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க  வேண்டியது அவசியம். குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்விற்கு செல்வதற்கு முன்பாக பெற்றோர்களின் ஆசி பெற்றுச் செல்வது நல்லது.

பெண்கள் : எந்த ஒரு விவகாரத்தையும் தீர்க்க தனித்துச் செயல்படாதீர்கள். கணவருடன் இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இக்கட்டான சூழலில்  சரியான முடிவெடுக்க இயலாது தடுமாறுவீர்கள். அநாவசியமான செலவுகள் அதிகரிக்கும். குறைந்த விலையுள்ள தரமற்ற பொருளை தரமானது என்று நம்பி  அதிக விலை கொடுத்து வாங்கும் சூழலுக்கு ஆளாவீர்கள். பணம் சார்ந்த விவகாரங்களில் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செயல்பட வேண்டியது  அவசியம். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை உங்கள் வெற்றிக்குத் துணைபுரியும். கணவருடன் வீண்வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் மனதளவில் பெரிய  விரிசல் உண்டாகிவிடும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

உத்யோகம் மற்றும் தொழில் நிலை: அஷ்டமத்துச்சனியால் உண்டாகும் தடைகள் ஓரளவிற்குக் குறைந்தாலும் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க இயலாது.  கீழ்நிலைப் பணியாளர்கள் செய்யும் தவறினை உடனடியாக மேலதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வது நல்லது. இதுநாள் வரை உங்களைத் தவறாக  எண்ணியிருந்த உயரதிகாரிகள் தற்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இருந்தாலும் உடனிருப்போரின் பொறாமை குணத்தினால் ஒரு சில பழிகளை  சுமக்க நேரிடும். குரு-சனியின் சேர்க்கை அத்தனை உசிதமில்லை என்றாலும் தனுசு ராசியில் குருபகவானின் பலம் கூடுவதால் சிரமம் அதிகம் இருக்காது என்று  நம்பலாம். ஒரு சிலர் பணியிடமாற்றத்தினால் குடும்பத்தினரை விட்டு பிரிந்திருக்க நேரிடும். அது போன்ற நேரத்தில் நேரத்தினை உணர்ந்துகொண்டு  நிர்வாகத்தோடு ஒத்துழைப்பது நல்லது. ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் பணியிழப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். வெளிநாட்டில்  பணிபுரிவோர் சென்ட்டிமெண்ட் உணர்வுகளால் பாதிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் கூடும். விவசாயத்தொழில் செய்வோர் அரசுத்தரப்பு  மானியம் கிடைக்க அதிகம் அலைய வேண்டியிருக்கும்.

பொதுவான நிலை : பொதுவாக அஷ்டமத்துச் சனியினால் உண்டாகும் பிரச்னைகளை குறைக்கும் வண்ணம் இந்த குரு பெயர்ச்சி அமைந்தாலும் உடனடி  நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. அதிர்ஷ்டக்காற்று என்பது இல்லாததால் நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்த்து  உள்ளதைத் தக்கவைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று சந்நதியை ஆறுமுறை வலம் வந்து வணங்குங்கள். நேரம் கிடைக்கும்போது  சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று கண்மலர் காணிக்கை செலுத்தி வணங்க அம்பிகையின் அருட்பார்வையினால் கஷ்டங்கள் நீங்கக் காண்பீர்கள்.

மிதுனம்

கண்டகச்சனியால் உண்டான கஷ்டங்கள் வெகுவாகக் குறையக் காண்பீர்கள். குருபகவானின் நேரடிப்பார்வை உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.  ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செயல்வேகத்தினைக் கூட்டுவார். ராகுவின் வேகத்தோடு குருவின் பார்வை பலமும் இணைவதால் உங்கள்  வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். இயற்கையில் புத்திசாதுர்யம்  நிறைந்தவர் என்பதால் எத்தகைய சூழலிலும் வெற்றி பெற்றுவருவீர்கள். குருவின் பார்வை பலம் இதுநாள் வரை உண்டான தடைகளை தகர்த்தெறியும்.  நீண்டநாட்களாக சரியாக முடிவெடுக்க இயலாமல் தவித்து வந்த விவகாரங்களில் தடாலடியாக முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். தடைபட்டு வந்த பணவரவு வந்து சேரும். எதிர்பாராத வகையில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சொந்தவீடு வாங்கும் கனவில்  உள்ளவர்களுக்கு நேரம் சாதகமாக அமையும். ஏழாம் வீட்டு குரு பகவான் தம்பதியருக்கிடையே அன்யோன்யத்தை அதிகரிக்கச் செய்வார். குடும்பத்தினரின்  எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை கொள்வீர்கள். நீங்கள் செய்ய நினைக்கும் பணிகளுக்குத் தேவையான வகையில் பொருள்வரவு அதிகரிக்கும்.  வருகின்ற ஒரு வருட காலமும் மிதுன ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

மாணவர்கள்: குருவின் ஆதரவினால் கல்விநிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். இதுநாள் வரை மனதில் இருந்து வந்த சோம்பல்தன்மை நீங்கும்.  எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு உண்டாகும். குறிப்பாக உயர்கல்வியில் உங்களுடைய துறையை சரியாகத் தேர்ந்தெடுத்து படித்துப் பயன்பெறுவீர்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கால நேரம் சாதகமாக அமையும். ஏற்கெனவே அயல்நாட்டில் படித்து வரும் மாணவர்கள்  அங்கேயே தங்களுக்கான பணியினைத் தேடிக்கொள்வார்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் மிதுன ராசி மாணவர்களுக்கு நிச்சயமாக வேலை கிடைத்துவிடும்.

பெண்கள்: திருமணத்தடை கண்டு வந்த பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த வரன் வந்து சேரக் காண்பர். கணவருடன் இணைந்து குடும்பத்தினை  வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வீர்கள். சதா உழைத்து வரும் நீங்கள் நேரத்திற்கு உணவருந்த வேண்டியது அவசியம். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம்  செலுத்துங்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் மதிப்புயரக் காண்பர். குறிப்பாக மிதுனராசியைச் சேர்ந்த பெண்கள் இந்த ஒரு வருட  காலத்தில் தங்களுக்கான முக்கியத்துவத்தைப் பெறுவார்கள்.

உத்யோகம் மற்றும் தொழில்நிலை: ஏழாம் வீட்டுச் சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு குருவின் பார்வை பலம் வலுவான நம்பிக்கையை உண்டாக்கும்.  உங்களை பாதித்து வந்த நிகழ்வுகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களைச் சுற்றி வந்த வீண்பழி அகலும். மேலதிகாரியின் ஆதரவினால் பணி உயர்வு,  விரும்பிய இடமாற்றம் ஆகியவற்றைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் மீதான கறைகள் நீங்கக் காண்பார்கள். நீண்டகாலமாக அந்நிய தேசத்தில்  பணிபுரிவோர் தங்கள் குடும்பத்தினரையும் தங்களுடன் அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றி காண்பர். விவசாயிகள் செழிப்பான நிலையினை அடைவார்கள்.  குறிப்பாக கால்நடை வளர்ப்பில் இருந்து வந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். பணப்பயிர்கள் நல்ல ஆதாயத்தினைத் தரும். சிறு மற்றும் குறுதொழில்  செய்வோர் அபாரமாக வளர்ச்சி பெறுவர். தொழில்முறையில் விருது பெறுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

பொதுவான நிலை: விடாமுயற்சியும், புத்தி சாதுர்யமும் சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். அதே நேரத்தில் உடல் ஆரோக்யத்தில் சிறப்பு கவனம் கொள்ள  வேண்டியது அவசியம். அலட்சிய போக்கினால் ஆரோக்யத்தில் ஒரு சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். அதே போல முக்கியமான விவகாரங்களில்  உண்டாகும் சிறு சிறு பிழைகளைக் கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அதனை சரிசெய்ய முயற்சியுங்கள். மற்றபடி இந்த ஒரு வருட காலமும் மிதுன  ராசிக்காரர்களுக்கு வெகுவான வளர்ச்சியைத்தான் தந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

பரிகாரம்: தினந்தோறும் கந்த சஷ்டி கவசத்தினை படித்து வருவது நல்லது. இயலாதவர்கள் அதனை ஒலிபெருக்கியில் ஓடவிட்டு காதால் கேட்பதும் நன்மை  தரும். நேரம் கிடைக்கும்போது திருச்செந்தூர் திருத்தலத்திற்குச் சென்று செந்தில்ஆண்டவனை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ள உங்கள் விருப்பங்கள்  எந்தவிதமான தடையுமின்றி நிறைவேறும்.

கடகம்

கடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தினாலும், பார்வை பலத்தினாலும் குறிப்பிடத்தகுந்த நன்மையைக் கண்டு வந்த உங்களுக்கு  இந்த குருபெயர்ச்சி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். இதுநாள் வரை ஐந்தாம் இடத்தில் வாசம் செய்து வந்த குருபகவான் தற்போது ஆறாம் இடத்திற்கு வர  உள்ளார். சகட யோகம் என்று சொல்லப்படக்கூடிய குருவின் ஆறாம் இடத்து சஞ்சாரம் இறங்கிய காரியங்களில் தடங்கல்களை ஏற்படுத்தும். எந்த ஒரு  விஷயமும் எளிதில் முடிவடையாது இழுபறியைத் தோற்றுவிக்கும். எடுத்த காரியங்கள் எளிதில் முடிவடையாது தாமதமாவதால் சிறிது மன சஞ்சலத்திற்கு  ஆளாவீர்கள். ஆறில் குரு பகவான் அமர்வது சிரமம் என்றாலும் அவரது சிறப்புப் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் தனவரவு என்பது தொடரும்.  ஆயினும் கடன்பிரச்னைகளால் சற்று அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேசும் வார்த்தைகளில் இனிமையை உணர்வீர்கள். ஆறாம் இடத்து குரு  ஆத்ம ஞானத்தைத் தருவதோடு, ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபடுத்துவார். நியாய, தர்மங்களை அலசி ஆராய்ந்து அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன்  வளரும். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். முக்கியமான பிரச்னைகளில் உங்களின் ஆலோசனையை நாடி வருவோரின் எண்ணிக்கை உயரும்.  உறவினர்களோடு விரோதம் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளதால் சற்று விலகியிருப்பதே நல்லது. தேவையற்ற விவாதங்கள் வீண் மனஸ்தாபத்தினைத்  தோற்றுவிக்கலாம். வீண்வம்பு, வழக்கு வந்து சேரக்கூடும். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடன் கொடுக்கல், வாங்கல்  பிரச்னைகளில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். வண்டி, வாகனங்களை  இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தொலைதூரப் பிரயாணங்களின் போது தக்க பாதுகாப்புடனும், மிகுந்த கவனத்துடனும் பயணிக்க  வேண்டியது கட்டாயமாகிறது. வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கக் கூடும். அளவுக்கதிகமான டென்ஷனாலும், ஓய்வில்லாமல் செயல்பட்டு வருவதாலும்  உடல்நிலையில் அசதி காண நேரிடலாம். ஆறாம் இடத்தில் உச்ச பலத்துடன் அமருகின்ற குரு பகவான் நீண்டநாள் வியாதிகளைக் குணப்படுத்துவார். அதே  நேரத்தில் தொற்று நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகளைத் தற்போது செய்வது நல்லதல்ல. வரும் ஒரு  வருட காலத்திற்கு எந்த ஒரு பணியிலும் மிகுந்த நிதானத்தோடும் கவனத்தோடும் ஈடுபட வேண்டியிருக்கும்.

மாணவர்கள்:  தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டும். கேள்விக்குரிய சரியான பதிலைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம்  உண்டாகும். இதனைத் தவிர்க்க தேர்விற்கு முன்னால் நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதி சரிபார்ப்பது நல்லது. ஞாபக மறதித் தொந்தரவால் சற்று  சிரமப்படுவீர்கள். இன்ஜினியரிங் சார்ந்த அனைத்துத் துறை மாணவர்களும் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள்: உங்கள் பேச்சுத்திறமையின் மூலம் நல்ல நண்பர்களை பெற்றிருக்கும் நீங்கள் அதே பேச்சின் மூலம் அவர்களோடு கருத்து வேறுபாடு கொள்ள  நேரிடலாம். குடும்பப் பெரியவர்களோடு அனுசரணையான அணுகுமுறை தேவை. அநாவசியமான சந்தேகத்தின் காரணமாக நீங்கள் பேசும் வார்த்தைகள்  நெருங்கிய உறவினர்களோடும், நண்பர்களோடும் கருத்து வேறுபாடு கொள்ளச் செய்யும். பெண்களைப் பொறுத்தவரை மனத்தெளிவுடன் செயல்படவேண்டும்  என்பது அவசியமாகிறது.

தொழில், உத்யோகம்: தவறான தகவல் மூலம் அலுவலகத்தில் உங்களுக்கு அவப்பெயர் தோன்றலாம். உத்யோகத்தைக் காத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.  பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டு. காவல்துறை, ராணுவம், தொழிற்சாலைப் பணியாளர்கள், போக்குவரத்துத்துறை,  மருத்துவம், நீதித்துறை சார்ந்த பணியாளர்கள் தங்கள் பணிகளில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.  இந்த நேரத்தில் தொழில் ரீதியாக  பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. விவசாயிகள் அரசுத்தரப்பில் இருந்து கடனுதவி கிடைக்கக் காண்பார்கள். டிராக்டர், அறுவடை இயந்திரம்  முதலானவற்றை வாங்குவதற்கு கால நேரம் கூடி வரும். வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சீஸ்  தொழிலில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

பொதுவான நிலை: பொதுவாக வருகின்ற ஒரு வருட காலம் உங்களுக்கு சற்று சோதனைக் காலமாக அமையலாம். வீண் கற்பனைகளால் இனம்புரியாத பயம்  ஒன்று மனதில் இடம் பெறும். எது ஒன்றையும் முழுமையாக நம்பியும், நம்பாலும் என இரட்டை மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். தெய்வ நம்பிக்கையின் மூலம்  மனத்தெளிவு காண முற்படுங்கள்.

பரிகாரம்: ஏகாதசி நாட்களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது திருமலை திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை  வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ள வாழ்வினில் முன்னேற்றம் தருகின்ற திருப்புமுனையைக் காண்பீர்கள்.

சிம்மம்

குரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இடம் பெயர உள்ளார். ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும்  ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு பகவான் மனதில் நற்சிந்தனையைத் தோற்றுவிப்பார். மேலும் குருவின் சிறப்புப் பார்வையும் ராசியின் மீது  விழுவதால் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மதிப்பும், மரியாதையும்  உயரும். அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் பரோபகார சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். குருபகவான் ஐந்தில் சென்று அமர்வதால் வரும் ஒரு  வருட காலத்திற்குள் நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். மனதில் சந்தோஷம் குடிபுகும். பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள்.  பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்வுகளைச் சந்திப்பீர்கள். ஐந்தாம் இடத்தில் அமரும் குருவினால் சாதுக்கள், சந்யாசிகள், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனான  சந்திப்பு உண்டாகும். மனதில் சாந்தமும், வாழ்வினில் நிம்மதியும் காண்பீர்கள். ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன்  செயல்படச் செய்யும். உங்கள் கருத்துக்களில் உறுதியாய் நிற்பீர்கள். குருபலனின் அ க்ரஹத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். உங்கள் ஆலோசனைகள்  அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் அமையும். மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்கு  மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுநாள் வரை விலகியிருந்த சொந்தம்  ஒன்று உங்கள் பந்தத்தை நாடி வரலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவின்  அனுக்ரஹத்தால் கடந்த காலத்தில் திருமணத்தடை கண்டவர்கள் இந்த நேரத்தில் மணவாழ்வினில் அடியெடுத்து வைப்பார்கள். குருபலத்தின் காரணமாக  இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கும். முக்கியமாகப் பிள்ளைப்பேற்றிற்காகக் காத்திருப்போருக்கு குருவின் அருளால் குழந்தை  பாக்கியம் கிட்டும்.

மாணவர்கள்: தங்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாறு ஆகிய துறையைச் சார்ந்த  மாணவர்களும், இரசாயனம், இயற்பியல், புவியியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். அலட்சியத்தின் காரணமாக மதிப்பெண்களைக்  கோட்டைவிடும் வாய்ப்பு உண்டு. மொழிப்பிரிவு பாடங்களில் சிறப்பு கவனம் தேவை. உங்கள் வெற்றிக்கு ஆசிரியர்கள் பக்கபலமாய்த் துணையிருப்பார்கள்.

பெண்கள் : இயற்கையில் வலிமையான மனம் கொண்ட நீங்கள் குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்க்கவும். எந்த ஒரு விஷயத்தையும்  கணவரின் மற்றும் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது நல்லது. பிள்ளைகளின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிறந்த வீட்டிற்கும்,  புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும்.

தொழில் , உத்யோகம் , உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வின் பேரில் இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம்.  முன்னேற்றம் கருதி இடமாற்றத்தினை ஏற்றுக் கொள்வது நல்லது. அயல்நாட்டு சம்பந்தமுடைய தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமெண்ட்,  ஸ்டேஷனரி, மளிகை சார்ந்த தொழில்கள் சிறப்பான முன்னேற்றம் காணும். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள்  ஆகியோர் தங்கள் தொழிலில் சிறப்பான லாபத்தினைக் காண்பர். விவசாயிகள் கால்நடை வளர்ப்பினில் நல்லதொரு வளர்ச்சியை காண்பார்கள். பணப்பயிர்கள்  செழித்து வளர்ந்து வருமானத்தைப் பெருக்கும். தொழில்முறையில் உங்களது முழுமுயற்சினால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பொதுவான நிலை :
 பொதுவாக வரும் ஒரு வருட காலத்திற்கு குருபகவானின் பார்வை ஜென்ம ராசியின் மீது நீடிப்பதால் எந்தவிதமான கவலையும் இன்றி  உங்களால் சுதந்திரமாகச் செயல்பட இயலும். ஜெய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுவும் உங்களது வெற்றியை உறுதி செய்கிறார். அதே நேரத்தில் தேவையற்ற  கற்பனைகளால் உண்டாகும் கவலையைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கூடா நட்பு கேடில் விளையும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பரிகாரம்: தினந்தோறும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஞாயிறு தோறும் ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதோ அல்லது  சூரியனுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வணங்குவதும் நல்லது. ஞாயிறுதோறும் சரபேஸ்வரர் வழிபாடும் வெற்றியைத் தரும். நேரம் கிடைக்கும்போது  கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபட தொடர்வெற்றி என்பது சாத்தியமாகும்.

கன்னி

கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்த குரு பகவானின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் முடிவிற்கு வந்து நான்காம் இடமாகிய சுகஸ்தானத்தில் அவரது  அமர்வைப் பெற உள்ளீர்கள். இதனால் வாழ்வியல் நிலையில் நிம்மதியான சுகத்தினை உணர்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்படும்  திறன் ஓங்கும். அதே நேரத்தில் அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். சுபகாரியங்களை நடத்துவதில் அதிக அலைச்சலை  சந்திப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவதால் மகிழ்ச்சி  கூடும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடையத் துவங்கும். பொருள் சேமிப்பில் ஈடுபடுவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். வீடு, மனை, நிலம் போன்ற  அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்து வைப்பது நல்லது. ஜனன ஜாதகத்தில் குரு, சுக்கிரன், சூரியன் வலுவாக இருக்கப் பிறந்தவர்கள் தங்கம், வெள்ளி,  வைரம் போன்றவற்றில் முதலீடு செய்ய இயலும். நான்காம் இடத்து குருவினால் ஆடை, ஆபரணங்கள் சேரும். சுக சௌகர்யங்கள் நிறைந்து விளங்கும். தாயார்  வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் இழந்த சொத்துக்களை மீட்கும் முயற்சியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். சதா உங்களைச் சுற்றி  மனிதர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். நீங்கள் இட்ட பணியைத் தட்டாமல் செய்யும் வகையில் பணியாளர்கள் அமைவார்கள். குடும்பத்தில் செல்வமும்,  சுகமும் நிறைந்து விளங்கும். தனிப்பட்ட முறையில் உங்கள் அந்தஸ்து உயர்வதோடு அதிகாரமும் செல்லுபடியாகும். வண்டி, வாகனங்கள் சேரும். இன்னும் ஒரு  வருட காலத்திற்கு அவ்வப்போது திடீர் பிரயாணங்கள் செய்ய நேரிட்டாலும் நல்ல வாகன சுகம் உண்டு. தொழில்முறைப் பிரயாணத்தின் போதும் ஆன்மிகப்  பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். விரய ஸ்தானம் ஆகிய எட்டாம் இடத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை சுபசெலவுகளை உண்டாக்கும்.  தாயார் வழி சொத்துக்கள் வந்து சேரும் நேரம் இது. அதே நேரத்தில் அவரது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மாணவர்கள் : குருவின் சாதகமான நிலையால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வியில்  தாங்கள் விரும்பிய பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் இன்ஜினியரிங், இயற்பியல், உடற்கல்வி, பிஸியோதெரபி, பயோ  டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

பெண்கள்: குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிவிடுவீர்கள். பிள்ளைகளின்  வளர்ச்சியில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். கணவரின் பணிகளுக்கு உங்களது ஆலோசனைகள் அவ்வப்போது தேவைப்படும். குழப்பம் தரும்  விவகாரங்களில் முக்கியமான முடிவுகளை புதன்கிழமையில் எடுப்பது நல்லது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தான, தர்மம் என்ற பெயரால்  ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்கவும்.

தொழில் , உத்யோகம்: ஜீவனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் தொழில் ரீதியாக ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். அரசாங்க  உத்யோகஸ்தர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிட்டும். உயரதிகாரிகளின் வழியில் தொல்லைகளுக்கு ஆளாகி வந்த உங்களுக்கு தற்போது விடிவுகாலம்  பிறந்துவிட்டது. தனியார்துறையில் பணியாற்றுபவர்கள் முதலாளியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். தொழில் முறையில் வெளிநாட்டு தொடர்பு  உடையவர்கள், டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோர் நன்மை காண்பார்கள். கட்டிடக்கலை, சமையல் கலை ஆகியவை  சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். உணவுப் பண்ட வியாபாரம் செழிக்கும். அரசியல்வாதிகள் தங்களுக்கு உரிய இடத்தினை நிர்ணயம்  செய்துகொள்வார்கள். விவசாயிகளுக்கு விளைச்சலும் வருமானமும் உயர்வு காணும். தண்ணீர் பற்றாக்குறை தீரும். ஓய்வில்லாமல் உழைப்பதற்கான பலனை  குருபகவான் நிச்சயம் தருவார்.

பொதுவான நிலை: பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களை ஓய்வாக அமர்ந்திருக்க விடாது. தொழில்முறையில் ஓய்வின்றி உழைப்பதும், அதிகப்படியான  அலைச்சலும் சதா இருந்துகொண்டிருக்கும். அதே நேரத்தில் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய சொத்துக்கள் சேரும். நிலுவையில் இருந்து  கடன்பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் உங்களது வருமானத்தை குருபகவான் உயர்த்துவார் என்பதில் ஐயமில்லை.

பரிகாரம்: அமாவாசை நாட்களில் அன்னதானம் செய்து வருவது நல்ல பனைத் தரும். அங்காள பரமேஸ்வரி வழிபாடும் நல்லது. நேரம் கிடைக்கும்போது  மேல்மலையனூர் திருத்தலத்திற்குச் சென்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதால் வாழ்வினில் வளம் பெறுவீர்கள்.

துலாம்

கடந்த ஒரு வருட காலமாக சிறப்பான நற்பலன்களைக் கண்டு வந்த நீங்கள் தற்போது நடைபெற உள்ள குருபெயர்ச்சியின் மூலம் சிறிது சிரமங்களையும்,  தடைகளையும் காண உள்ளீர்கள். குருபகவான் தன ஸ்தானத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பெயர் இருப்பது பொருளாதார ரீதியாக சற்று சுமாரான  பலன்களையே உண்டாக்கும். ஆயினும் மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத அலைச்சலை சந்திக்க நேரிடும். எந்த ஒரு  காரியத்தைத் துவக்கினாலும் முதலில் ஒரு தடங்கலும் அதன்பின் உங்களது விடாமுயற்சியால் அதில் வெற்றியும் கண்டு வருவீர்கள். குருவின் மூன்றாம்  இடத்துச் சஞ்சாரம் மனோதிடத்தினை உங்களுக்கு அளித்தாலும், முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க இயலாது சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.  எப்படிப்பட்ட விளைவையும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்து வந்தாலும் ஒருவித ஐயப்பாட்டோடு செயல்படுவீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய்  செயல்படுவார்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். இக்கட்டான நேரங்களில் நண்பர்களின் உதவியால் வெற்றி காண்பீர்கள். ஏழாம் இடத்தின் மீதான குரு  பகவானின் பார்வையால் வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணிகளுக்குச் செல்லும்போது வாழ்க்கைத்  துணையையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. குடும்ப விவகாரங்களில் நீங்கள் நேரடியாக தலையிடாமல் அவரது துணையுடன் செயல்பட்டால் பிரச்னைகள்  விரைவில் தீர்வு காணும். சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணையும் நேரம் இது. இக்கட்டான சூழலில் நேரத்தினை உணர்ந்துகொண்டு  அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது. அடுத்தவர்களின் செயல்களைப் பொறுப்பேற்றுச் செய்து கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். பணிச்சுமையின்  காரணமாக உண்டாகும் ஞாபகமறதித் தொந்தரவில் இருந்து விடுபட செய்ய வேண்டிய பணிகளை எழுதி வைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.

மாணவர்கள்: மாணவர்களின் கல்வி நிலையைப் பொறுத்தவரை சிறப்பாக அமையும். வினாவிற்கேற்ற விடையினை சரியான புள்ளிவிபரத்துடன் வெளிப்படுத்தி  மிகுதியான மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளியில் நடைபெறும் உடல் ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் துலாம் ராசி மாணவர்கள் முதலிடம்  பிடிப்பார்கள். ஏரோநாட்டிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் அறிவியல்துறை மாணவர்கள் சிறப்பான நற்பலன்களைக் காண்பார்கள்.

பெண்கள்: அவ்வப்போது மனக்குழப்பத்திற்கு ஆளாகி வருவீர்கள். இக்கட்டான சூழலில் கணவரின் ஆலோசனைகள் பயன்தரும். குடும்பப் பெரியவர்களுக்கு சேவை  செய்வதில் மனதிருப்தி காண்பீர்கள். அக்கம்பக்கத்து பெண்டிரோடு கொண்டிருக்கும் சுமுக உறவு தக்க சமயத்தில் உதவியாய் அமையும். முன்பின் தெரியாத  நபர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் அதிக எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது அவசியம்.

தொழில், உத்யோகம் : கூட்டுத்தொழில் லாபகரமான முறையில் இருந்தாலும், பங்குதாரர்களோடு கருத்து வேறுபாடு தோன்றாமல் இருக்க கணக்கு வழக்குகளை  கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் குறைந்து வருவதாக  உணர்வார்கள். விவசாயிகள் கால்நடைகளின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. விளைச்சலை குறித்த நேரத்தில் அறுவடை செய்துவிட வேண்டும்.  ஒருநாள் தாமதித்தாலும் எதிர்பாராத வகையில் நஷ்டத்தினை சந்திக்க நேரும். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் சற்று நிதானித்து செயல்படவேண்டியது  அவசியம். லேடி டாக்டர்கள் சாதனை படைப்பார்கள். இயந்திரங்கள் சார்ந்த தொழில் சிறப்பான தனலாபத்தினைப் பெற்றுத் தரும். உத்யோகஸ்தர்கள் தங்கள்  பொறுப்புகளை யாரை நம்பியும் விட்டுச் செல்வதோ, அல்லது அடுத்தவர்களின் வேலையை கூடுதலாகச் சுமப்பதோ கூடாது. பிறர் செய்யும் தவறு தொழில்  முறையில் உங்களுக்கு பாதிப்பினைத் தோற்றுவிக்கலாம். மேலதிகாரிகள் செய்யும் தவறு உங்கள் மனதினை உறுத்தும். அரசுப்பணியாளர்கள் தங்களுக்கு கிடைக்க  வேண்டிய சலுகைகள் இன்னமும் வந்து சேரவில்லையே என்ற ஆதங்கத்தினை அடைவார்கள். புதிதாக வேலைக்கு முயற்சிப்போர் மிகுந்த சிரமத்தினை  சந்திப்பார்கள்.

பொதுவான நிலை: உங்கள் பெயரை உபயோகப்படுத்தி உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பலனை அனுபவித்துவிடுவார்கள். உங்களது இயற்கை குணமான  செயல்வேகமும் சுறுசுறுப்பும் சற்று குறையும். அனுபவ அறிவினைப் பெறுவதால் அதிகம் பேசாது அமைதி காத்து வருவீர்கள். பொதுவாக அடுத்தவர்கள்  விவகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதை இந்த குருபெயர்ச்சி வலியுறுத்திச் சொல்கிறது.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு உங்கள் குறைகளைப் போக்கிடும். தினமும் வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து குலதெய்வத்தினை மனதில் தியானித்து  பிரார்த்தனை செய்து வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது வேலூர்மாவட்டம், போளூரை அடுத்து உள்ள படைவீடு திருத்தலத்திற்குச் சென்று ரேணுகா  பரமேஸ்வரி அம்மனை தரிசித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அம்மனின் அருளால் குறைகள் நீங்கி நலமுடன் வாழ்வீர்கள்.

விருச்சிகம்

கடந்த ஒரு வருட காலமாக ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் தற்போது இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். பொதுவாக  ஜென்ம ராசியை விட தன ஸ்தானத்தில் குரு பகவானின் செயல்பாடு  மிகுந்த நற்பயனைத் தரும். ஏழரைச்சனி முடிவிற்கு வரும் தருவாயில் உள்ள உங்களுக்கு  குருவின் சாதகமான சஞ்சாரம் வலிமை சேர்க்கும். வரும் ஒரு வருட காலத்தில் தடையில்லாத தன வரவின் காரணமாக பொருளாதார நிலை நல்ல இலக்கை  எட்டும். அதுவும் தன ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலம் பெறுவதால் சிறப்பான தனலாபத்தை அடைவீர்கள்.  அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் அநாவசிய செலவினங்களைத் தவிர்க்க இயலும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை  நிறைவேற்றுவதற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். குரு பகவானின் அருளால் குடும்பத்தில் இந்த ஆண்டு சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எந்த ஒரு  விஷயத்தையும் கையாள்வதற்கு முன்னால் யோசித்து செயலில் இறங்குவது நல்லது. அதில் உள்ள நன்மை தீமையை முதலிலேயே ஆராய்ந்து செயலில்  இறங்குவதன் மூலம் நிச்சயமாக வெற்றி உண்டாகும். நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படுவதன் அவசியத்தை உணர்வீர்கள். இக்கட்டான நேரத்தில் உங்கள்  புத்திகூர்மை வெளிப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் அக்கறை கொள்வீர்கள். நீங்கள் கூறும் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க  வைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை சதா இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையிலும்,  மன நிலையிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். தம்பதியருக்குள் வாக்குவாதம் உண்டாகும் நேரத்தில் நீங்களே விட்டுக் கொடுத்துச்  செல்ல வேண்டியிருக்கும். நண்பர்களோடு அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். முன்பின் தெரியாத புதிய நபர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு  உண்டென்பதால் எல்லோருடனும் மிகுந்த கவனத்துடன் பழகி வர வேண்டியது அவசியம். வண்டி, வாகனங்களை இயக்கும்போது நிதானம் தேவை.
மாணவர்கள் : தங்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாறு ஆகிய துறையைச் சார்ந்த  மாணவர்களும், இரசாயனம், இயற்பியல், புவியியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். தேர்வு நேரத்தில் குரு பகவானின் அருளால் பொது  அறிவு வளரும். கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் பெறுவார்கள். கேம்பஸ் மற்றும் நேர்முகத்தேர்வுகளில் வெற்றி  உறுதி.

பெண்கள் : குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் சுமக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். உங்களின் விவேகமான அணுகுமுறையால் பிரச்னைகளை எளிதில்  சமாளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை தக்க வைப்பீர்கள்.  கணவரோடு அவ்வப்போது வீண் விவாதம் தோன்றும். அவருக்கு சரியென்று படுவது  உங்களுக்குத் தவறாகத் தோன்றலாம். ஆயினும் தம்பதியருக்கிடையே அன்யோன்யத்திற்கு குறைவு நேராது.

தொழில், உத்யோகம் : வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்கு உதாரணமாக உங்கள் பேச்சுத் திறமையின் மூலம் பல காரியங்களை சாதிப்பீர்கள்.  மேலதிகாரிகள் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்கள் என்று இரு தரப்பிலிருந்தும் உங்களுக்கு ஆதரவு பெருகும். உயர்பதவியில் உள்ளோர் அவ்வப்போது கேம்ப்,  இன்ஸ்பெக்‌ஷன் என்று அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்ஸ்யூரன்ஸ். சாஃப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும்  பத்திரிகைத் துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். விவசாயிகள் தங்களது  பழைய கடன்கள் முடிவிற்கு வரக் காண்பார்கள், அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கால்நடை பராமரிப்பு நன்மை தரும். அரசியல்வாதிகள்  மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசாமல் சாமர்த்தியமாக செயல்படுவது நல்லது. சுயதொழில் செய்வோர் பார்ட்னர்ஷிப் ஏதுமின்றி தனித்துச்  செயல்பவடுவது நல்ல லாபத்தினைப் பெற்றுத் தரும்.

பொதுவான நிலை: பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். கடன்பிரச்னைகள் தீர்வடையும். எந்த ஒரு காரியத்திலும்  தெளிவாகவும், தீர்க்கமாகவும் செயல்படுவீர்கள். புத்தி சாதுர்யத்தால் வெற்றி கண்டு வருவீர்கள். சிக்கன முயற்சிகள் சிறப்பான வெற்றியைத் தரும். நான்குபேர்  மத்தியில் அதிகம் பேசாமல் அமைதி காப்பது உங்கள் வெற்றியை உறுதி செய்யும்.

பரிகாரம்: ஏழரைச்சனியின் இறுதிக்காலம் என்பதால் சனி தோறும் விரதம் இருந்து காகத்திற்கு எள்ளுப்பொடி சாதம் வைத்து வணங்குவது நல்லது. ஆஞ்சநேயர்  வழிபாடும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருநள்ளாறு திருத்தலத்திற்குச் சென்று நளதீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதோடு சனிபகவானை தரிசித்து  அர்ச்சனை செய்துவழிபட வெற்றி உண்டாகும்.

தனுசு

‘ஜென்ம ராமர் வனத்திலே’ என்ற பழமொழி தனுசுராசிக்காரர்களுக்குப் பொருந்தாது. உங்கள் ராசியில் குருபகவான் ஆட்சிபலம் பெற்று சொந்த வீட்டில்  அமர்வதால் இடப்பெயர்ச்சி என்ற பேச்சிற்கு இடமில்லாமல் போகிறது. மனதில் நீதி, நேர்மை, நியாயம் போன்ற குணங்களுக்கு இடமளிப்பீர்கள். குறுக்கு  வழிகளைப் பின்பற்ற மனம் ஒப்பாது என்பதால் சற்று சிரமத்துடன்தான் முன்னேற்றம் காண்பீர்கள். குருவின் ஆட்சி பலத்தால் ஏதேனும் ஒரு வழியில் நினைத்தது  நடக்கும். ஆயினும் ஜென்ம குருவினால் உண்டாகும் மன சஞ்சலம் இருந்து வருவதைத் தவிர்க்க இயலாது.  கோயில்களுக்குச் செல்லுதல், இயலாதவர்களுக்கு  உதவுதல், தான தருமங்கள் செய்தல் போன்றவற்றின் மூலம் மனதில் திருப்தி காண இயலும். சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிகப் பெரியோர்கள் ஆகியோரைச்  சந்திக்கும் வாய்ப்பு வந்து சேரும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாது நிதானத்துடன் சிந்தித்து செயல்படுங்கள். குரு ஜென்ம ராசியில் அமர்வதால்  குருபலமும் வந்து சேர்கிறது. இதனால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புத்ர காரகனான குருவின் அருட்பார்வை  ஐந்தாம் இடத்தின் மீது விழுவதால் நெடுநாட்களாக பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்பவர்கள் புத்ர பாக்யத்தை அடைவார்கள். பிள்ளைகளின் வாழ்வினில்  குறிப்பிடத்தகுந்த சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வாழும் பெற்றோர்கள் அவர்களுடன்  இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணத்திற்காகக் காத்திருப்போருக்கு குருவின் இந்த ஒரு வருட சஞ்சாரத்திற்குள் நல்ல வரன் அமையும்.  நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடத்திற்கு ஆளாவீர்கள். ‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்னும் பழமொழியை மனதில் கொண்டு  பிரச்னைக்குரிய மனிதர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. 2019ம் ஆண்டின் இறுதியில் தொலைதூரப் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும்.  வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். முன்னோர்களின் சொத்துக்கள் அனுகூலத்தினைத் தரும். கடன் பிரச்சினைகள் தீர்வடையும்.  வழக்கு வியாஜ்ஜியங்கள் விரைவாக முடிவிற்கு வரும். உங்களை இதுநாள் வரை எதிரியாக எண்ணியவர்கள் உண்மையைப் புரிந்துகொண்டு உங்களை நாடி  வருவார்கள்.

மாணவர்கள்: மாணவர்களைப் பொறுத்த வரை கிரஹ சஞ்சார நிலை சிறப்பாக உள்ளது. ஞாபகமறதி முற்றிலும் காணாமல் போகும். பாடங்களை வேகமாகப்  படித்து முடித்துவிடுவீர்கள். அதே நேரத்தில் அவசரத்தை கைவிட்டு கேட்கப்படும் கேள்வியினை சரியாகப் புரிந்துகொண்டு சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுத  வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் துணையோடு தனுசு ராசி மாணவர்கள் கல்வியில் முதன்மை பெறுவர்.

பெண்கள்: பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும். நவீன வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதோடு அவற்றின்  உபயோகம் குறித்து தோழியர் மத்தியிலும் விவரிப்பீர்கள். கணவர் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாய் இருப்பார். அவரது நண்பர்களில் நல்லவர், தீயவரைப்  பிரித்தறிந்து தகுந்த நேரத்தில் அவருக்கு உரிய ஆலோசனையைச் சொல்வீர்கள். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகள் இவ்வருடத்தில் உண்டாகும். குடும்ப  விசேஷங்களில் உறவினர்களை அதிகம் நம்பாது தனித்து செயல்படுவீர்கள்.

தொழில், உத்யோகம்: அலுவலகத்தில் உடன் பணி புரிவோர் மற்றும் உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் உங்களின் செயல் வேகத்திற்கு முழு ஒத்துழைப்பு  அளிப்பார்கள். அதே நேரத்தில் நீங்கள் ஒரு தனி வட்டத்தை உருவாக்குவதாக நினைக்கும் மேலதிகாரியோடு மோதல்போக்கு உண்டாகலாம். உங்களுக்கு வந்து  சேர வேண்டிய பதவி உயர்வு மற்றும் சம்பளத்தில் உயர்வு ஆகியவை அவரால் தடைபடுவதாக உணர்வீர்கள். சுயதொழிலில் குளிர்பான பொருட்கள், உணவு  சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர், பொன், வெள்ளி போன்ற ஆபரணத் தொழில் செய்பவர்கள், ஜவுளி, வாசனாதி திரவியங்கள், ஃபேன்சி பொருட்கள்  விற்பனையாளர்கள், வங்கி, இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்டுகள் ஆகியோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் கூடினாலும்  லாபம் கிட்டும். அதே நேரத்தில் பழைய வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்து உங்கள் வளர்ச்சியைத் தடைசெய்யக் கூடும். விவசாயிகளுக்கு நிலுவையில்  இருந்து வரும் கடன்களால் சற்று தொல்லை உருவாகும். கால்நடை பராமரிப்பில் அதிக கவனம் தேவை.

பொதுவான நிலை: ஓய்வின்றி செயல்பட்டு வரும் உங்களுக்கு இந்த வருடத்தில் பொறுப்புகள் கூடும். அலைச்சலுக்கு ஏற்ப தனலாபம் கிட்டுவதோடு உங்கள்  நிர்வாகத்திறனும் மேம்படும். இயன்ற வரை அநாவசிய செலவுகளைத் தவிர்த்து சிக்கன நடவடிக்கையில் ஈடுபடுவது நல்லது. எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று  குறைவதான மனநிலையில் இருந்து வருவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாரின் சந்நதியில் நெய்விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். தினமும் விஷ்ணு ஸஹஸ்ராம ஸ்தோத்ரத்தைப்  படிப்பதோ அல்லது காதால் கேட்டு வருவதோ நல்லது. நேரம் கிடைக்கும் பொழுது கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்திற்குச் சென்று சக்கரத்தாழ்வாரை தரிசித்து  பிரார்த்தனை செய்துகொள்ள உங்கள் முன்னேற்றத்தில் இருந்து வரும் தடைகள் விலகும்.

மகரம்

வெற்றியைத் தரக்கூடிய 11ம் இடத்தில் அமர்ந்திருந்த குரு பகவான் தற்போது அங்கிருந்து இடம் பெயன்று 12ம் இடத்திற்கு வந்து அமர்வது சற்று சிரமத்தினைத்  தரக் கூடும். ஏற்கெனவே 12ல் சனி-கேது இணைந்திருக்கும் நிலையில் குருவும் வந்து இணைவது அத்தனை உசிதமில்லை. குருவின் சொந்தவீடுதான் என்றாலும்  தனிச்சிறப்பு எதையும் எதிர்பார்க்க இயலாது. நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது.  சிந்தனையில் இருப்பவற்றை செயல்படுத்த நினைப்பது நடைமுறை வாழ்வினில் எவ்வளவு சிரமம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எடுத்த பணியை  வெற்றிகரமாக செய்து முடிக்க சற்று கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். குரு 12ம் இடத்தில் அமர்வது அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தாது.  பொருளாதார நிலையில் பற்றாக்குறை என்பது உண்டாகும். இருந்தாலும் அத்தியாவசியமான செலவிற்கு மட்டும் உரிய நேரத்தில் பொருள்வரவு வந்து  சேர்ந்துவிடும். நல்லறிவினைத் தரும் குரு 12ல் அமர்வதால் சிந்தனையில் குழப்பம் உண்டாகி உங்களைத் தெளிவான முடிவெடுக்க இயலாத சூழலுக்குத் தள்ளும்.  குடும்பத்தில் உண்டாகும் பிரச்னைகள் உங்கள் மனநிலையை மிகவும் பாடாய்படுத்தும். முக்கியமான பணிகளின் போது அடுத்தவர்களை நம்பி காத்திருக்க  வேண்டி வரும். குடியிருக்கும் வீட்டினில் காலத்திற்கேற்ற வகையில் மாற்றங்களைச் செய்ய எண்ணுவீர்கள். சிறிது காலம் பொறுத்திருப்பது நல்லது. கொடுக்கல்,  வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிகவும் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்காக அதிகம்  செலவழிப்பீர்கள். ஆன்மிக ரீதியாக தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். விடை தெரியாத கேள்விகளால் மனதில் குழப்பமான சூழல் நிலவி வரும்.  தத்துவ சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். உறக்கத்தின்போது அவ்வப்போது கனவுத் தொல்லையால் அவதிப்படுவீர்கள். அநாவசிய சிந்தனைகளால்  மனதில் ஒருவித பய உணர்வு இடம்பிடிப்பதை தவிர்க்க இயலாது.

மாணவர்கள் :  உயர்கல்வி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது போனாலும் எதிர்பார்த்த பாடப்பிரிவினில் வேறு கல்லூரியில் இடம்  கிடைக்கும். குரு பகவானின் அமர்வு நிலை உங்கள் எழுத்து வேகத்தினைக் குறைக்கும். நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப்பார்ப்பது நல்லது. தேர்வு நேரத்தில்  ஞாபக மறதித் தொந்தரவினால் மிகவும் அவதிப்படுவீர்கள். தேர்வு குறித்த பயம் உடல்நிலையில் பாதிப்பினை உண்டாக்கலாம். கவனம் தேவை. இன்ஜினியரிங்,  மொழிப்பாடம், கலைத்துறை, வேளாண்மை, சைகாலஜி துறை சேர்ந்த மாணவர்கள் ஓரளவு முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள்: குடும்ப விவகாரங்களில் உங்களின் தலையீடு பிரச்னையைப் பெரிதாக்கும். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தவறாகப் புரிந்துகொண்டு குடும்ப  உறுப்பினர்கள் உங்களோடு கருத்து வேறுபாடு கொள்வர். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே மனஸ்தாபம் உண்டாகலாம். குடும்பப் பிரச்னைகளை  அண்டை அயலாரோடு விவாதிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளை கணவரோடு பகிர்ந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியது  அவசியம். நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.

தொழில், உத்யோகம்: வங்கி, இன்ஸ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை ஆகியவை சார்ந்த பணியாளர்கள்  சற்று சிரமம் காண்பார்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் ஓய்வின்றி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவல் பணிகளில் மேலதிகாரிகளின் உதவி  கிட்டாது போகும். சிறு தவறுகளைக் கூட பெரிதுபடுத்திச் சொல்லிக்காட்டுவார்கள். அதே நேரத்தில் கீழ்நிலைப் பணியாளர்கள் துணை நிற்பார்கள். சுயதொழில்  செய்வோரில் பால், கூல்டிரிங்ஸ், மினரல் வாட்டர், தின்பண்டங்கள், பெட்டிக்கடை போன்ற சில்லறை வணிகம் சிறக்கும். தொழிலதிபர்கள் பணப்பற்றாக்குறையால்  தொடர்ந்து தொழிலை நடத்துவதில் அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள். அரசியல்வாதிகள் பதவியிலிருந்து ஓரங்கட்டப்படும் சூழல் உருவாகும். தனிப்பட்ட  முறையில் உங்கள் செல்வாக்கு சரியக்கூடும். விவசாயிகள் தங்கள் கடுமையான உழைப்பினால் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். ஆனால் அதனை  தனலாபமாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற இயலாது தவிக்க நேரிடும்.

பொதுவான நிலை: பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற நிலையைத் தருகிறது. பொறுமை கடலினும் பெரிது என்பதை நினைவில்கொண்டு  செயல்படுங்கள். உங்கள் உழைப்பிற்கான பலன் தற்போது கிடைக்காமல் போனாலும் காலம் வரும்போது நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன்  செயல்படுங்கள். அதிகாரப்போக்கும் அவசரமும் அதிக இழப்பினத் தந்துவிடும். மதியூகமும், நிதானமும் மட்டுமே தற்போதைய சூழலில் துணைநிற்கும் என்பதை  நினைவில்கொண்டு செயல்படுங்கள்.

பரிகாரம்: சனி தோறும் வராஹ ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள். அதோடு அவ்வப்போது ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வருவதும் நல்லது. இந்த ஒரு  வருட காலமும் சனிக்கிழமை விரதம் என்பது கட்டாயமாகிறது. நேரம் கிடைக்கும்போது விருத்தாசலம் அருகில் உள்ள முஷ்ணம் திருத்தலத்திற்குச் சென்று  வராஹ ஸ்வாமியை வழிபட்டு உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். திருப்பதி திருமலையில் குளக்கரையில் அமைந்துள்ள ஆதிவராஹமூர்த்தியையும் தரிசித்து நன்மை பெறலாம்.

கும்பம்

வெற்றியைத் தரும் பதினொன்றாம் இடத்திற்கு குரு பகவான் வரவிருப்பது கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான அம்சம் ஆகும். இறங்கிய காரியங்களில்  நியாயமான முறையில் உங்களது வெற்றியைப் பதிவு செய்வீர்கள். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். மனதினில் அதிகத் தன்னம்பிக்கையோடு  செயல்படுவீர்கள். அதிலும் 11ல் குரு-சனி-கேது ஆகியோரின் இணைவு நீங்கள் எதிர்பாராத வகையில் நற்பலன்களைத் தரவல்லது. இதுநாள் வரை கண்டு வந்த  சிரமங்கள் வெகுவாகக் குறைந்திடக் காண்பீர்கள். 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் இது வரை குரு பகவான் சஞ்சரித்ததால் உங்களது உண்மையான  உழைப்பினை வெளிப்படுத்தி வந்துள்ளீர்கள். இப்பொழுது அவர் உங்கள் ஜென்ம ராசிக்கு 11ம் இடமாகிய லாப ஸ்தானத்திற்கு வர உள்ளார். லாபத்தினைத் தரும்  11ம் இடத்தில் அமர்வது மிகவும் விசேஷமான பலனைத் தரும். இதுநாள் வரை சிரமத்தினை சந்தித்து வந்த நீங்கள் அதற்கான தனலாபத்தை அடைய உள்ளீர்கள்.  உண்மையாக உழைத்ததற்கான பலன் தற்போது கிட்டும். மேலும் 11ம் இடம் என்பது வெற்றியைக் குறிக்கும் இடம் என்பதால் நினைத்த காரியம் ஜெயமாகும்.  நல்ல தனலாபம் கிடைப்பதோடு ஸ்தான பலமும் உண்டாகும். புதிதாக வீடு, மனை ஆகியன வாங்கும் யோகம் கிட்டும். உங்களது முயற்சிகளும், செயல்களும்  மற்றவர்களுக்கு உதவும் வகையில் அமைந்து உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். உடன்பிறந்த சகோதரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு  நீங்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவினை எட்டும். குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி  கலகலப்பான சூழல் உருவாகும்.  எந்த ஒரு செயலையும் சிறிது காலத்திற்கு முன்னதாகவே சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்துவதால் வெற்றி  என்பது உறுதியாகிறது. ஒவ்வொரு செயலிலும் தனிப்பட்ட முறையில் உங்கள் முத்திரையை பதித்து வருவீர்கள். தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள்  மற்றவர்கள் மத்தியில் உங்களை வேறுபடுத்திக் காட்டும். உங்களது நட்பு வட்டம் விரிவடைந்து அதன் மூலம் உங்கள் புகழ் பரவக் காண்பீர்கள்.

மாணவர்கள்: மாணவர்களின் அறிவுத்திறன் கூடும். கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஞாபக மறதித் தொந்தரவு முற்றிலும் அகலும்.  கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும்  போட்டிகளில் கும்ப ராசி மாணவர்கள் முதலிடம் பிடிப்பர். காமர்ஸ், எக்கனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுண்டன்ஸி, கணிதம், மொழிப்பிரிவு துறை சார்ந்த  மாணவர்கள் சிறப்பிடம் பெறுவார்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் உதவித்தொகையுடன் தங்கள் விருப்பம் நிறைவேறக்  காண்பார்கள்.

பெண்கள்: குடும்பப் பெரியவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். வீட்டினில் தங்கம், வெள்ளியிலான பொருட்கள் சேரும். குடியிருக்கும் வீட்டினை  சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிறப்பு கவனம் கொள்வீர்கள். குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களின் போது உங்களது நிர்வாகத் திறன் வெளிப்படும். அடுத்த  வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்வதில் மன நிம்மதி உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் பணிகளுக்கு அவ்வப்போது தக்க ஆலோசனை வழங்குவீர்கள்.  பிள்ளைகளின் வழியில் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். பெரிய பொறுப்புகளை முழு மனதோடு செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள்.

தொழில், உத்யோகம் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். ஒரு சிலர் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக வெளிநாடு செல்லும்  வாய்ப்பினை அடைவர். மருத்துவம், சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளை பதவியும் பட்டமும்  தேடி வரும் நேரம் இது. ஏற்றுமதி, இறக்குமதி, கேட்டரிங், தரகுத் தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள்  மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் நன்மை  அடைவார்கள். பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் பெருத்த அளவில் முன்னேற்றம் காண்பார்கள்.  விவசாயிகள் அரசுத்தரப்பிலிருந்து விருது பெறும் அளவிற்கு உயர்வு காண்பார்கள்.

பொதுவான நிலை : பொதுவாக இன்னும் ஒரு வருட காலத்திற்கு ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் திருநாளாய் அமையும். ஜனன ஜாதகத்தில் பலமான திசை  புக்தியைக் கொண்டவர்கள் சிறப்பான பெயரும், புகழும் அடைவார்கள். குறைந்த பலம் உடைய ஜாதகர் கூட குறிப்பிடத்தகுந்த நன்மை அடைவார்கள். இந்த  குருபெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களைத் தருகிறது என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

பரிகாரம் : குருபெயர்ச்சி நாளில் அருகிலுள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் கோபூஜை செய்து வழிபடுவதும் சகல  ஐஸ்வரியங்களையும் தரும். நேரம் கிடைக்கும்போது ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்குச் சென்று ரங்கநாதரை தரிசிக்க மனதில் சந்தோஷம் நீடித்திருக்கும்.

மீனம்

வரவிருக்கும் குருப்பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களைப் பொறுத்த வரை தொழில்முறையில் சிறிது சிரமத்தினைத் தந்தாலும் இறுதியில் நற்பெயரைப் பெற்றுத்  தரும். பத்தாம் இடத்து குரு பதவியைப் பறிப்பார் என்ற பழமொழி உங்களுக்குப் பொருந்தாது. உங்கள் ராசியின் அதிபதி ஆகிய குரு பகவான் பத்தில் ஆட்சி  பெறுவதால் தொழில் ரீதியாக அதிக அலைச்சலைத் தருவாரே தவிர பதவியைப் பறிக்கமாட்டார். சிரமப்படுவதற்கான நற்பலனையும் குரு பகவான் அளிப்பார்.  உங்களது அர்ப்பணிப்புடன் கூடிய உண்மையான உழைப்பினால் நற்பெயரோடு புகழையும் அடைவீர்கள். ஆனால் எதிர்பார்க்கும் தன லாபத்தினை அடைய சிறிது  காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் சேமிப்புகள் உயரத் துவங்கும்.  பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி மகிழ்ச்சி குடிபுகும். குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குடும்ப  உறுப்பினர்கள் உங்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் உங்கள் பொறுப்புகள் கூடும். பொறுப்புகள் கூடினாலும் மிகுந்த ஈடுபாட்டோடு பணி  செய்வதில் பூரண திருப்தி அடைவீர்கள். மதியூகம் நிறைந்த உங்கள் வார்த்தைகள் மிகுந்த மதிப்பினைப் பெறும். ஆதாரத்துடன் நீங்கள் பேசும் வார்த்தைகள்  எதிராளியை கலங்கடிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் மிகுந்த முனைப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தோரால் ஒரு சில இழப்புகளுக்கு  ஆளாகலாம். முக்கியமான பணிகளின் போது அடுத்தவர்களை நம்பாது நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். மாற்று மதத்தினருடன்  பழகும்போது அதிக எச்சரிக்கை தேவை. செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல்  அவ்வப்போது பழுதடைந்து சிரமத்தினைத் தரலாம். ஜென்ம ராசியின் மீது இருந்து வந்த குரு பகவானின் பார்வை அகலுவதால் செயல்களில் சற்று நிதானம்  தேவை. சுகஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டின் மீது குருபகவானின் நேரடிப்பார்வை விழுவதால் வீடு, வண்டி, வாகனம், மனை ஆகியன சேரும். குடியிருக்கும்  வீட்டினில் மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சேரும். தாயார் வழி உறவினர்களுக்கு அவ்வப்போது உதவி செய்ய  வேண்டியிருக்கும்.

மாணவர்கள்: வித்யா ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் மாணவர்கள் தங்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். குரு பகவானின் அருளால்  ஏழரைச் சனியின் தாக்கம் குறையும். செய்முறைத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறும் நீங்கள் எழுத்துத் தேர்வுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த  வேண்டியது அவசியம். ஒருமுறை எழுதிப் பார்த்தாலே உங்கள் மனதில் பதிந்து விடும். மெரைன் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்ஸ் போன்ற துறைகளில் பயிலும்  மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள்: குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக் காண்பீர்கள். வேலைப்பளுவின் காரணமாக நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும்.  முன்பின் தெரியாத பெண்களின் இணைவு எதிர்பாராத பிரச்னையைத் தரக்கூடும். ஏமாற்றுக்கார பெண்களின் பிடியில் சிக்கி பொருளிழப்பு உண்டாகலாம். கணவரின்  மனநிலையைப் புரிந்துகொள்வதில் சிரமம் காண்பீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபசெலவுகள் உண்டாகும்.

தொழில், உத்யோகம் : உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். வங்கி மற்றும் நிதிநிறுவனங்களில்  பணி செய்வோர் பணத்தைக் கையாளும்போது சிறப்பு கவனம் தேவை. கள்ளநோட்டுகளைக் கண்டறிவதில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது  அவசியம். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் மிகப் பெரிய லாபத்தினைக் காண இயலாவிட்டாலும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் வியாபார யுக்தியை  மாற்றிக்கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை குருபகவான் நிச்சயம் பெற்றுத் தருவார். செல்வச் சேர்க்கையில் சிறிதும்  குறைவு உண்டாகாது. ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பலத்தோடு குரு அமர்வதால் வாழ்வியல் தரம் சிறப்பான முன்னேற்றத்தை அடையும். உணவுப் பொருட்கள்  வியாபாரம், குளிர்பான விற்பனை, தோல்பொருட்கள் ஏற்றுமதி, செல்போன், சிம்கார்டு விற்பனை ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல லாபம் அடைவர்.

பொதுவான நிலை: பொதுவாக இந்த குருபெயர்ச்சியினால் உங்கள் உழைக்கும் திறன் உயர்வடையும். வரும் ஒரு வருட காலத்திற்குள் சமுதாயத்தில் உங்கள்  அந்தஸ்து ஒரு படி உயரும் என்பது உறுதி. திட்டமிட்டு செலவு செய்தால் வருமானம் மிச்சமாகும். ஒரு சில தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு வாக்குறுதி  தந்துவிட்டு அதனைக் காப்பாற்றுவதில் கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரலாம். கவனத்துடன் பேசுங்கள். கவலையின்றி வாழுங்கள்.

பரிகாரம்: பிரதி பௌர்ணமி நாளில் அருகிலுள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்து வாருங்கள். வீட்டினில் விசேஷமாக பௌர்ணமி பூஜை செய்து பரமேஸ்வரனை  வழிபடுவதும் நல்லது. நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரரை வழிபட வாழ்வினில் முன்னேற்றம் காண்பீர்கள்.

Check Also

84/0 என்ற நிலையில் 36 ரன்களுக்குள் 10 விக்கெட்டை இழந்து தோல்வியை சந்தித்த பிரிஸ்பேன் ஹீட்

பிக் பாஷ் டி20 லீக்கில் பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் – பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. …