Published On: Thu, May 3rd, 2012

சிறுகதை – இருவர்

Share This
Tags

புகையிரதம் புறப்பட இன்னும் பத்து நிமிடங்களேயிருந்தன. வங்கியில் அரைநாள் ‘லீவெ’டுத்துக்கொண்டு மதியம் புறப்பட்டது குகனுக்கு நல்லதாகப்பட்டது. ‘சுத்தானந்தபவனி’ல் கட்டிக்கொண்டுவந்த சோற்றுப்பார்சலைப் பிரித்து அவசர அவசரமாகச் சாப்பிட்டான். இரவுப் புகையிரதத்தில் சென்றால் அடுத்தநாள் வகுப்பில் தூங்கிவழிய வேண்டியிருக்கும். மூன்றாம் வகுப்புப் பெட்டியில் அவனைவிட மூன்று பேர்தான் இருந்தார்கள். நீட்டிநிமிர்ந்து உட்கார்ந்திருக்க முடிகிறது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் இரவுப் புகையிரதத்தில்; நிற்பதற்குக்கூட இடங்கிடையாது.
‘வவுனியாவில் இருந்து கொழும்பை நோக்கிச் செல்லும் யாழ்தேவி இன்னும் சிறிது நேரத்தில் புறப்படும். அது …’;
தமிழிலும் சிங்களத்திலும் ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார்கள். வவுனியாவுக்கு அப்பால் தாண்டிக்குளத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் தண்டவாளங்களே இல்லாமற்போய் ஒன்பது வருடங்களுக்கு மேலாகின்றபோதும், புகையிரதத்தின் பெயரை இன்னும் யாழ்தேவி என்றே அழைக்கிறார்களே!

‘வெளியே புகையிரத மேடையில் சிவப்புத்தொப்பி தரித்த இராணுவப் பொலிசார் பயணிகளைத் சோதித்துக்கொண்டிருந்தனர். புகையிரத நிலையத்தின் வாசலில் பெயர் முகவரிகளைப் பதிந்து, உடல், உடைமைகளைத் சோதித்துத்தானே ‘ரிக்கெற்’ எடுக்க விடுகிறவர்கள்… பிறகேன் உள்ளுக்குள் வந்தபின்னும் சோதிக்கிறார்கள்? ‘
புகையிரதம் மெதுவாக புறப்பட்டுப் பின் விரைவு கொண்டது. மரங்கள், மின்கம்பங்கள், கட்டடங்கள் பின்நோக்கி நகர்ந்தன.
பெட்டியினுள் வெக்கையாயிருந்தது. ஒரு வயோதிபர் ‘வீரகேசரி’யை வாசித்தபடியிருந்தார். அவரின் அருகிலிருந்த பெண் வெற்றிலையைச் சப்பி எச்சிலை வெளியே துப்பினாள். அத்தம்பதியினரின் அருகிலிருந்த பையிலிருந்து ‘எக்ஸ்ரே றிப்போட்’ துருத்திக்கொண்டு வெளியே எட்டிப்பார்த்தது. வைத்தியத் தேவைக்காகக் கொழும்புக்குப் போகிறார்கள் போல… சோதனைக் கெடுபிடிகள் நிறைந்த இந்நாட்களில் ‘கோல்பேஸை’யும் மிருகக்காட்சிச்சாலையையும் பார்க்கவா கொழும்புக்குப் போவார்கள்! இளைஞனொருவன் ‘சீற்’றில் கிடையாகப் ;படுத்திருந்தான். ஈரற்;பெரியகுளம் வரை இல்லை, அனுராதபுரம் மட்டும் இப்படியே நீட்டிநிமிர்ந்து போகலாம் போல… தூங்குகின்ற தமிழரைத் தட்டியெழுப்பத்தான் எப்போதுமே அனுராதபுர புகையிரத நிலையத்தில் சிங்களவர் ஏறவேண்டுமா? சீற்றில் கிடையாகப் படுத்திருப்பவன் தமிழனோ சிங்களவனோ அவன் யாராக இருந்தாலும், அனுராதபுர புகையிரத நிலையத்தில் ஏறுகின்ற சிங்களவன் கட்டாயம் தட்டியெழுப்புவான்!
..
சீற்றில் படுத்திருந்த இளைஞன் எழுந்து வந்து குகனுக்கு முன்னால் உள்ள ஆசனத்தில் அமர்ந்தான். அவனின் கட்டையாக வெட்டப்பட்டிருந்த தலைமயிரும் காய்ந்துகறுத்திருந்த முகமும் பச்சைநிற ‘ஜம்பரு’ம் அழுக்கடைந்திருந்த இளம்பச்சை ‘ரீ-ஷேட்’டும், குகனுக்கு ஒரு மாதிரியாகவிருந்தது. இவ்வளவு ஆசனங்கள் வெறுமையாயிருக்க, ஏன் இதில் வந்து உட்காருகிறான்… ‘பிக்பொக்கற்’ காரனாயிருப்பானோ?

ஈரற்பெரியகுளம் புகையிரத நிலையத்தில் இளஞ்சோடியொன்று பெட்டியினுள் வந்தமர்ந்தது. நிலையத்தின் மேடையில் இராணுவத்தினரும் இராணுவப் பொலிசாரும் நடந்து திரிந்தனர்.
‘வடே…வடே…’
பெண்ணொருத்தி கூவியபடி வந்தாள். இளஞ்சோடி வாங்கிக்கொண்டது. குகனும் ஐந்து வடைகளை வாங்கிக்கொண்டான். முன்னாலிருக்கும் இளைஞனுக்குக் கொடுப்பதா விடுவதா எனக் குகன் யோசித்தான். அவன் குகனையே பார்த்தபடியிருந்தான்… வடையொன்றை எடுத்து அவனிடம் நீட்டிப் பார்த்தான்.
‘போமஸ் துதி ஐயே’ என்று சொல்லியவாறு விரைவாகச் சாப்பிட்டான். இரண்டு மூன்று நாட்களாகச் சாப்பிடாமலிருந்திருப்பான் போல… அவனைப் பார்க்கப் ;பாவமாயிருந்தது. குகன் வடையொன்றை எடுத்துவிட்டு பையை அவனிடம் நீட்டினான். அவன் ஒரு வடையை எடுப்பான் என எதிர்பார்த்தான்ளூ ஆனால் அவன் பையை அப்படியே வாங்கிக்கொண்டான்.
வெளியே எறித்த வெய்யிலின் அகோரம் பெட்டியின் உள்ளேயும் தாக்கியது. இளைஞன் இவனையே பார்த்தபடியிருந்தான் – புன்னகைக்க முயற்சித்தான். இவன் அவனைக் கவனியாதவன் போல பாடக்குறிப்புகளை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.
‘ ஐயே, ரிக்கெற் எக்க கண்டோண… சல்லி தென்ட.’
முன்னாலிருந்தவன் குகனைப் பார்த்துக் கேட்டான். இவனை அண்ணா, அண்ணா என்று முன்பு அழைத்த றமணன் இப்போது உயிருடன் இல்லை… ; இவன் அண்ணா என்கிறானே… பயணச்சீட்டு இல்லாது பயணம் செய்துகொண்டு அதை வாங்குவதற்குப் பணம் கேட்கிறானே! குகனுக்கு அவனைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவனுடன் இலேசாக பேச்சுக் கொடுத்துப் பார்த்தான்.
..
சுமித்; தென்மாகாணத்தின் பின்தங்கிய கிராமமொன்றைச் சேர்ந்தவன். எண்பதுகளின் இறுதிப்பகுதியில் ரயர்போட்டு அரைகுறையாக எரிக்கப்பட்டு, பின்னர் களுகங்கையில் மிதந்த நூற்றுக்கணக்கான சடலங்களில் ஒன்று சுமித்தின் தந்தை சுமணபாலவினுடையது. கிராமத்தில் அமைதியாகத் தோட்டம் செய்துகொண்டிருந்த அவருக்கு ஜகத், சுமித், கங்கா ஆகியோர் பிள்ளைகள். தைமாதமொன்றின் பி;ன்னிரவில், வானம் இருண்டிருந்தது. நிலவு எங்கோ போய் ஒளித்துவிட்டிருந்தது. ஓரிரு தாரகைகள் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன. அவர்களது வீட்டுக்கதவு தட்டப்பட்டது. நாய் ‘பண்டா’ பலமாகக் குரைத்தது. வெளியே, தாடி வளர்த்த நான்கைந்து இளைஞர்கள் நின்றார்கள்.
‘மாத்தயா, அப்பிட்ட படகினி…..மொக்குத் கண்ட தென்டப் புளுவன்;த ….?’
வளர்ந்திருந்த தாடியும், வாரப்படாத தலைமயிரும், பலநாள் குளிக்காமல் நாற்றம் அடிக்கும் மேனியும் அவர்கள் யாரென சுமணபாலவிற்கு இனங்காட்டின. அவர்களின் முகங்களைப் பார்க்க நான்கைந்து நாட்கள் சாப்பிடாதவர்கள் போலிருந்தது. அந்த நள்ளிரவு வேளையில் வீட்டில் உணவேதும் இருக்கவில்லை. பொது இலட்சியத்திற்காக வீடுகளைத் துறந்து, காடுமேடெல்லாம் அலைந்து பசிகொண்டிருக்கும்; இளைஞர்களை, வீட்டில் உணவி;ல்லை என்று சொல்லி வெறும்வயிற்றோடு அனுப்ப அவருக்கு விருப்பமில்லை.
‘ பொட்டக்கிண்ட… க்காம உயல தென்னங்… மல்லிலா வாடிவெண்ட…’
என்றபடி அவர், முற்றத்தில் இருந்த ஈரப்பலாமரத்தில் காய்களைப் பறித்தார். மனைவி உலை மூட்டினாள். ஒன்பதாம் தரத்தில் படித்துக்கொண்டிருந்த மூத்தமகன் ஜகத் கருவாட்டை வெட்டிக் கழுவினான். நித்திரை குழம்;பிய அசதியில் எட்டு வயதுச் சிறுவன் சுமித் ;புதிதாக இருந்தவர்களைப் பார்த்தான். அவர்கள் இவனைப் பார்த்து சிநேகமாய்ப் புன்னகைத்தார்கள். ; சிலரின் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. சிலர் பெரிய சுவரொட்டிகளை வைத்திருந்தனர்;.
சுடச்சுட சிவப்பு அரிசிச் சோறும் பருப்பும், ஈரப்பலாக்காய்க் கறியும், கருவாட்டுக் குழம்பும் அவர்களுக்கு அமிர்தமாயிருந்திருக்க வேண்டும். இப்படி ; வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாட்களோ! வெட்கப்படாமல்,
‘ அம்மே! பருப்பு சுட்டக் தாண்ட, பத் தாண்ட…’ என்று, இரண்டு மூன்று தரம் சுமித்தின் தாயிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள். சாப்பிட்டவர்கள் சுமித்தின் பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்கி, இருளினுள் மறைந்தார்கள்.
காலையில் சுமித் உறக்கத்திலிருந்து எழுந்தபோது வீட்டைச் சுற்றி சீருடையினர் நின்றனர். சுமித்தின் தகப்பனின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. அவரை வீட்டுக்கதவருகே முழங்காலில் நிற்க வைத்திருந்தனர். நெற்றியிலிருந்து குருதி கொப்புளித்தது.. துவக்குப்பிடியினால் ஒருவன் அவரை அடித்தபடி, முதல்நாள் இரவு வந்து சாப்பிட்டுப்போனவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று சொல்லும்படி அதட்டிக்கொண்டிருந்தான். தெரிந்தால்தானே அவரால் சொல்ல முடியும்!
‘ மம தண்ண நா மாத்தயா…’ வேதனையில் அவர் குரல் ஈனமாய் ஒலித்தது. சுமித்துக்குப்; பயமாயிருந்தது. தமையன் ஜகத்தின் சாரத்தினைக் கழற்றி நிர்வாணமாக்கி, அவனிடமும் முதல்நாள் இரவு வந்து போனவர்களைப்பற்றி விசாரித்து அடித்தார்கள்.
சிறிது நேரத்தில் சுமித்தின் தகப்பனையும் தமையனையும் ஜீப்பினுள் தூக்கி வீசினார்கள். ஜீப் கிராமத்தின் குச்சொழுங்கைகளைத் தாண்டி பிரதான தெருவுக்கு விரைந்ததை சுமித் பார்த்தபடியிருந்தான். தாய் அழுதபடி ஜீப்பின் பின்னால் சிறிது தூரம் ஓடிவிட்டுத் திரும்பி வந்தாள். மூன்றாம் நாள், அரைகுறையாய் எரிந்திருந்த சுமணபாலவின் சடலத்தைக் களுகங்கையில் கண்டெடுதத்தாய்க் கூறி, அயலவர்கள் சுமித்தின் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். சமயச் சடங்குகளுடன், அவருடல் அடக்கம் செய்யப்பட்டது. தமையன் ஜகத் என்னவானான் என்பது இவர்களுக்கு இன்றுவரை தெரியாமலே போயிற்று.

..

யன்னலால் தெரிந்த வெளிகளில் புற்கள் காய்ந்திருந்தன. ஓரிரு மாடுகள் மரநிழல்களில் படுத்து சோம்பேறிகளாய் அசைபோட்டன. வெளிகளில் மனிதத் தலைகளையே காணோம். வுழக்கமாகத் தண்டவாளக் ;கரைகளில் நின்று புகையிரதத்திற்குக் கையசைக்கும் சிறார்கள், இந்த வெக்கை நேரம் எங்குபோய்த் தொலைந்தார்களோ? புகையிரதம்கூட மெதுவாக ஊர்ந்து போவதைப் போலிருந்தது. பெட்டியினுள் கிழவர் சுருட்டொன்றைப் புகைத்துக்கொண்டிருந்தார். கிழவி தூங்கி வழிந்தாள். இளம் பெண்ணின் மடியில் தலைவைத்து இளைஞன் தூங்கினான். முன்னாலிருந்த சுமித்; குகனையே உற்றுப் பார்த்தபடியிருந்தான். பாடக்குறிப்புகளை எடுத்து வாசிக்க குகனுக்கு அலுப்பாயிருந்தது. கண்களை மூடித் தூங்க முயற்சித்தான்.
..
கடந்த சில வாரங்களாக வவுனியா நகருக்கு வடக்கே பாரிய குண்டுச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டவண்ணமுள்ளன. ஏ9 வீதியால் கனரக வாகனங்கள் பல வடக்கு நோக்கி விரைகின்றன. இறுகிய முகங்களுடனும் ஆயுதமேந்திய கரங்களுடனும் அவற்றில் படையினர் பயணிக்கின்றனர். வவுனியாவிலுள்ள சிறிய விமான நிலையத்திலிருந்து குண்டுகளைச் சுமந்தபடி, விமானங்கள் அடிக்கடி வடக்கு நோக்கிப் பறக்கின்றன. அவை அவற்றை எங்கு கொண்டுபோய் எவர்தலையில் கொட்டித் தொலைக்கின்றனவோ! வடக்கிலிருந்து வவுனியாவை நோக்கி அவல ஒலி எழுப்பியபடி வரும் அம்புலன்ஸ் வண்டிகள் காயமடைந்தோரை வைத்தியசாலையில் இறக்கி விட்டுவிட்டு, மீண்டும் அலறியடித்தபடி போர்முனைகள் நோக்கி விரைகின்றன. வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம், கொழும்பு வைத்தியசாலைகளுக்கு காயமடைந்தோர் பலர் மாற்றப்படுகின்றனர். சவப்பெட்டிகள் அடுக்கடுக்காய் தெற்கு நோக்கி; விரைகின்றன. தெற்கிலுள்ள கிராமப்புறப் பெற்றோர் போர்முனைகளில் காயப்பட்ட தம்பிள்ளைகளை வைத்தியசாலைகளில் தேடி அலைகின்றனர். அப்பாவிகளாய்த் தெரியும் அவர்களின் முகங்களில் துயர் போர்த்தியுள்ளது.

போர்முனைகளிலிருந்து தப்பியோடிவரும் படையினரை இராணுவப் பொலிசார் கைது செய்து கூட்டிச் செல்கின்றனர். சென்ற வாரங்கூட குகன்; வங்கியிலிருந்து அறைக்குத் திரும்புகையில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக, போர்முனையில் இருந்து தப்பி வந்த இரண்டு படையினரை இராணுவப் பொலிசார் அடித்து, ‘ட்ரக்;’ வண்டியில் ஏற்றிச் சென்றதைக் கண்டான். அவர்கள் கதறியபடி சென்றார்கள். கொலைக் களத்திற்குச் செல்லும் கால்நடைகளும் இப்படித்தான் கதறுமோ? சிறிது காலத்தில் அவர்கள் மீண்டும் போர்முனைக்கு அனுப்பப்படலாம். அவர்கள் ஏதோ சிங்களக் கிராமங்களைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள். பணத்திற்காகவோ இல்லை யாராவது இனவாத அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டோ, அவர்கள் படையில் இணைந்திருக்கலாம். யுத்தத்தின் கொடுமையைக் கண்டு அதனை வெறுத்துப் பயந்து ஓடுகிறார்கள்… கிராமங்களின் ;; சிறிய குடிசைகளில் இவர்களின் அன்புக்குரியவர்கள் வாழக்கூடும்!
..
‘ஐயே ரிக்கெற்…’
சுமித் மீண்டும் இரக்கிறான். எப்படி இராணுவப் பொலிசாரின் கண்களில் மண்ணைத் தூவி பெட்டியில் ஏறியிருப்பான்? குகனுக்கு வியப்பாயிருந்தது. பாடக்குறிப்பு;களை எடுத்து வாசிப்பது போல அவனுக்குப் பாவனை செய்தான். பாடக்குறிப்பிலுள்ளவை மூளைக்குள் செல்ல மறுத்தன. முன்னால் இருப்பவனைப் பற்றிய எண்ணமே மீண்டும்மீண்டும் வந்து தொலைத்தது. சுமித்துக்கு மிஞ்சிப் போனால் வயது இருபதைக்கூடத் தாண்டாது. உயிரைக் காப்பாற்ற ஓடுகிறானா? இவனின் கிராமத்தில் இவனில் பாசம் வைத்த உறவுகள் வாழலாம். அவர்களைத் தேடித்தான் போகின்றான் போல… றமணன் உயிருடனிருந்தால்… அவனுக்கும் இவனின் வயதுதானே இருக்கும்?
..
வவுனியாவில் வர்த்தக வங்கியில் ‘லிகிதர்;’ ஆக வேலைசெய்யும் குகனால் நினைத்த மாத்திரத்தில் யாழ்ப்பாணம் செல்லமுடியாத அவலம். ஏ9 வீதி மூடப்பட்ட பின் தலையைச்சுற்றி மூக்கைத் தொடும் கதையாய், வவுனியாவில் இருந்து இரத்மலானைக்குப்போய்;, அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பறக்கவேண்டிய விசித்திரம். அதற்குக்கூட படையினரின் ‘கிளியரன்ஸ்’ எடுத்து செலவளித்து ரிக்கெற் எடுப்பதற்கு, மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். குகன் வீட்டிற்குச் சென்று வருடக்கணக்காகின்றது.
வாரநாட்களில் அலுவலகம், பொது நூலகம், சுத்தானந்தபவன், தனிஅறை என்றும்: வெள்ளிக்கிழமைகளில் புகையிரதத்தில் கொழும்புப் பயணம் – சனி ஞாயிறுகளில் வங்கிப் பதவி உயர்வுப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்த ‘பொரளை’யில் வகுப்புக்கள்: ஞாயிறுகளில் இரவுப் புகையிரதத்தில் கொழும்பிலிருந்து வவுனியாப் பயணம் என்று உப்புச்சப்பின்றிக் கரைகின்றது வாழ்வு.

பயணச்சீட்டு இல்லாது பயணம்செய்யும் சுமித் பரிசோதகர்களிடம் பிடிபட்டால், தண்டம் செலுத்தப் பணமிருக்காது. நிச்சயம் அவர்கள் சுமித்தைக் கூட்டிச் செல்வார்கள். இவன் இராணுவத்திலிருந்து தப்பிவரும் விசயம் அம்பலமாகும். இராணுவப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவான். மீண்டும் போர்முனைக்கு அனுப்பப்படுவான். காயப்படல் அல்லது மரணம். றமணன்கூட உயிரற்றுச் சடலமாய்த்தானே வந்தான்!
‘ஐயே சல்லி தென்ட…’
சுமித் தொடர்ந்து இரந்தபடியிருந்தான். அவன் பிடிபட்டால் பொதுமன்னிப்புக் கிடைக்கும். மீண்டும்; பணியில் இணைத்துக் கொள்ளப்படுவான். ஆனால் குகன் பிடிபட்டால், ஏதோவொரு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படலாம். இவனுக்கு உதவி செய்யப் போய் ஏன் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டுப்படவேண்டும்? இவங்களால்தானே நாங்கள் இப்படிக் கஸ்ரப்படுகிறோம். இவன் பிடிபட்டால் என்ன இறந்தால் என்ன? குகனுக்கு வெறுப்பாயிருந்தது.
‘ ஐயே சல்லி….’
‘ மட்ட சல்லி நா…’ சற்று உரத்துச் சொல்லிவிட்டு குகன் பெட்டியின் கூரையைப் பார்த்தான். கறள் பிடித்த மின்விசிறியின் இறக்கைகள் ஒன்றையொன்று துரத்தின. பெட்டிக்குள் நிலவிய புழுக்கத்தை அவற்றினால் விரட்ட முடியவில்லை.
..
மதவாச்சி புகையிரத நிலையத்தில் ஏறிய இரு இராணுவப் பொலிசார் தூங்கி வழிந்த கிழவரை எழுப்பி,; அவரது பையைத் தட்டிக்கொட்டிச் சோதித்தனர். கிழவி நடுங்கியபடி அடையாள அட்டையை நீட்டிக்கொண்டிருந்தாள். இராணுவப் பொலிசார் கதைத்த சிங்களம் அவ்வயோதிபத் தம்பதியினருக்குப் புரியவில்லை!
‘மகரகம… கான்ஸ்சர்… ஒப்பரேசன்…’ என்று வயோதிபர் தடுமாறிக்கொண்டிருந்தார். எழுந்துபோய் சிங்களத்தை மொழிபெயர்த்து அந்த வயோதிபத் தம்பதியினருக்கு உதவுவோமா என எண்ணினான். வேண்டாம், உன்னை யார் இங்கே வரச்சொன்னது? நீ போய் இரு என்று இராணுவப் பொலிசார் ஏசினாலும் ஏசலாம்.
சுமித்தின் முகம் வெளிறியிருந்தது. அவன் இப்போது ஆசனத்தில் படுத்துக் கிடந்தான்.

இளஞ்சோடியிடம் அடையாள அட்டைகள் இருக்கவில்லை.
‘அப்பி சிங்களே… ஐ ஐடென்ரிக் காட் அகண்ணே?’ அந்தப் பெண் வாதிட்டாள். இராணுவப் பொலிசாரும் அவர்களுடன் மாறிமாறி வாதிட்டனர். புகையிரதம் புறப்படுவதற்கு ஆயத்தமாக விசில் சத்தம் கேட்க, இளஞ்சோடியை ஏசியபடி இராணுவப் பொலிசார் இறங்கிப் போயினர்.

சுமித் முகத்தைக் கையால் துடைத்தபடி எழுந்திருந்தான். அவனின் முகம் பேயறைந்தது போலிருந்தது.
..

சுமித்துக்கு காசு இல்லையைன்று சொல்லியிருக்கக் கூடாது. பாவம் சுமித்! தலைகுனிந்து, குகனைப் பார்ப்பதைத் தவிர்த்து புகையிரதத்தின் தரையைப் பார்த்தபடியிருந்தான். அரைகுறையாய் எரிந்து அணைந்த சிகரெட்துண்டொன்று தரையில் கிடந்தது. அது அவனுக்கு அரைகுறையாய் எரிந்து ஆற்றில் மிதந்த தந்தை சுமணபாலவை நினைவூட்டிற்றோ? அதனையே உற்றுப்பார்த்படியிருந்தான். கண்கள் கலங்கியிருந்தன.
சுமித்தின் முகத்தோற்றம் குகனுக்கு இப்போது றமணனை நினைவுபடுத்திற்று. இவனுக்கு சற்றுத் தடித்த மீசையிருந்தால் அசல் றமணனைப் போலவேயிருப்பான் என எண்ணிக் கொண்டான். இவன் என்ன தமிழரைக் கொல்லவேண்டும் என நினைத்தா படையில் சேர்ந்திருப்பான்? குடும்பக் கஷ்டத்தினால் சேர்ந்திருக்கலாம்! சுமித் அழுதபடி சொன்னது குகனின் நினைவில் திரும்பத் திரும்பத் வந்து தொலைத்தது.
..
கணவன் இறக்க – மூத்த புதல்வன் காணாமற் போக… சுமித்தின் தாய் நோயாளியானாள். இவன் கஷ்டப்பட்டு பத்தாம் வகுப்புவரை படித்தான். தங்கையைப் பார்க்க வேண்டிய பொறுப்பு சுமித்தின் தோள்களைத் தாக்கியது. வேலை தேடி காலி, கண்டி, கொழும்பு ..என்று அலைந்தான். ஓரிடமும் இவனால் நிலைத்து நின்று வேலைசெய்ய முடியவில்லை. இறுதியில், அவன் வெறுத்த – அவனின் தந்தையைக் கொன்ற – தமையனைக் காணாமல் போகச் செய்த இராணுவத்தில் சேரவேண்டியதாயிற்று.
மாதாந்தம் சம்பளம் கிடைத்தது. வீட்டுக்கு அனுப்பினான். ஆனால் சுமித்தால்; நிம்மதியாக இருக்க முடியவில்லை. இவனுடன் ஒன்றாக இருந்தவர்கள் பலர் போர்க்களங்களில் மடிந்தார்கள்-அங்கவீனமானார்கள்.; எங்காவது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால,; வீதிகளில் தென்படும்; பொதுமக்களைத் தாக்குவார்கள்.
பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளைக்; காணும்போதெல்லாம் சுமித்துக்குத் தனது தங்கை கங்காவின் நினைவுகள் மேலெழும். ஆனால் மற்றவர்கள் அந்த மாணவிகளுடன் சேட்டைகள் விடுவார்கள். கேட்பதற்கு ஆட்களில்லை. அந்தப் பிள்ளைகள் இவர்களுக்குப் பயந்து பாடசாலைக்குப் போவதை நிறுத்தினர். ஒருநாள், முதியவரொருவர் சைக்கிளில் ஒழுங்கையால் போகும்போது இவனது நண்பர்கள் விளையாட்டாக அவரைச் சைக்கிளுடன் தள்ளிவிட்டார்கள். சைக்கிளுடன் வீதியில் விழுந்த அவரது நெற்றியிலிந்து குருதி கொப்புளித்தது. நொண்டி நொண்டி சைக்கிளை உருட்டிக்கொண்டு நடக்க முயற்சித்தார். அவரைப் பார்க்க சுமித்துக்கு தந்தையின் நினைவு வந்தது. அவரின் காயங்களுக்கு மருந்து கட்டி, அவரது சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு வந்தான். இந்த நரகத்திலிருந்து எப்படியும் தப்பி வீட்டுக்குப் போவதென்ற முடிவை அன்றுதான் இவன் எடுத்தான்.

. .
ஏதோவொரு சிறிய புகையிரதநிலையத்தில் ஒருநிமிடம் தரித்துவிட்டு புகையிரதம் புறப்பட்டது.
குகனுக்கு சுமித்தை எப்படியும் காப்பாற்ற வேண்டும் போலிருந்தது. சுமித் பயணச்சீட்டு; இல்லாது புகையிரத நிலையத்தில் இறங்கிப் போனான் என்றால், அங்கு ‘ரிக்கெற்;’ சேகரிப்பவரிடம் பிடிபடுவான். இவன் தப்பி வரும் விஷயம் தெரியவரும.;
சிறிய இரும்புக் கம்பியினால் பெட்டிகளில் தட்டியபடி வந்த பயணச்சீட்டுப்; பரிசோதகர்கள் கிழவரை எழுப்பி ரிக்n;கற்றைப்;; பரிசீலித்தார்கள். சுமித் நடுங்கியபடியிருந்தான் – மரநாய்களைக் கண்டு கூட்டினுள் நடுங்கும் கோழியைப்போல் அவனிருந்தான்.
குகன் தனது ரிக்கெற்றை சுமித்திடம் நீட்டினான். அவன் நடுங்;கும் கரங்களால் அதனை வாங்கிவிட்டுக் குகனைப் பார்த்துக் கும்பிட்டான். குகன் தனது ‘பொக்கற’;றினுள் ரிக்கெற்றைத் தேடுவது போல் பாவனை செய்தான். பரிசோதகர்கள் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

தண்டம் செலுத்தினால் போகின்றது…! குகன் ஏன் பயப்பட வேண்டும்? ஊர்ந்து கொண்டிருந்த புகையிரதம் இப்போது ஆர்முடுகி தனது வேகத்தை அதிகரித்து விரைந்தது. பெட்டிக்குள் குளிர்மையான காற்றுத் தவழ்ந்தது. அனுராதபுரப்பக்கம் மழை பொழிகின்றது போல…! நன்றி:

தேவ முகுந்தன்

Displaying 2 Comments
Have Your Say
  1. sothithas says:

    இச் சிறுகதை தேவ முகுந்தனால் எழுதப்பட்ட நல்ல கதைகளில் ஒன்று எழுதியவர் பெயர் விடுபட்டிருந்தது எழுத்தாளர் விபரம் தெரிந்தால் கதைக்கான விமர்சனங்களை எழுத்தாளருக்கு தெரிய படுத்த இலகுவாயிருக்கும்..

  2. sothithas says:

    மீள் பிரசுரம் செய்தமைக்கு நன்றிகள். வாழ்க யாழ்ஓசையின் தமிழ்ப் பணி.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...