Breaking News
Home / latest-update / பக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி!

வதாரங்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். நாராயணன் என்ற சொல்லே நரசிம்ம அவதாரத்தைத்தான் குறிக்கும் என்று சான்றோர்கள் சொல்வது உண்டு. அந்த அளவுக்கு நரசிம்ம அவதாரம் பல்வேறு தனித்துவங்களைத் தன்னுள் கொண்டது. ராமாவதாரம் , `பித்ரு வாக்கியப் பரிபாலன’த்துக்காக நிகழ்ந்தது என்று சொல்வர். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை மெய்ப்பிக்கவே ராமாவதாரம் நிகழ்ந்தது என்று சொல்லுவர். அதேபோல், ஒவ்வோர் அவதாரத்திலும், அதர்மத்தை அழிப்பதோடு, ஒரு தர்மத்தைக் காப்பது குறித்த நோக்கமும் கலந்திருக்கும். அப்படித்தான் நரசிம்மர், `பக்த வாக்கிய பரிபாலனம்’ என்னும் அடியார் வாக்கை, மெய்ப்பிக்க விரும்பி அவர் மேற்கொண்ட அவதாரம்’ என்கின்றனர்.

நரசிம்ம ஜயந்தி திரௌபதியின் மானம் காக்க அவள், `கோவிந்தா’ என்று அழைத்ததும், அவன் இருந்த இடத்தில் இருந்தே அவளின் மானத்தைக் காத்தான். நேரே தோன்ற வேண்டிய அவசியம் அப்போது ஏற்படவில்லை. ஆனால், நேரில் தோன்றியே ஆகவேண்டிய கட்டாயம் எப்போது பகவானுக்கு ஏற்படுகிறதென்றால், பக்தனின் வாக்கைக் காப்பாற்ற வேண்டிய தருணம் ஏற்படுகிறபோது அது நிகழ்கிறது.

பிரகலாதனைப் பலமுறை இரண்யகசிபு துன்பப்படுத்த முயன்றான். அப்பொழுதெல்லாம், நாராயணன், இருந்த இடத்திலிருந்தே அவனைக் காத்தார். ஆனால், “உன் நாராயணன் எங்கிருக்கிறான்..?” என்று இரண்யகசிபு கேட்டதும், “அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று பிரகலாதன் பதிலுரைத்ததும், அதை மெய்ப்பிக்க வேண்டிய கட்டாயம் நாராயணனுக்கு உருவாகிறது. இரண்யன் ஒரு தூணைக் காட்டி, “இந்தத் தூணில் இருக்கிறானா?” என்று கேட்டபோது, பிரகலாதனும் “ஆம்” என்று சொல்ல, இரண்யன், அந்தத் தூணை உடைக்க ஆரம்பித்தான். தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வெளிப்பட்டார். இரண்யனை வதம் செய்தார்.

நரசிம்மர்

புராண காலங்களில் மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்காகப் பிரசன்னமாகி அருள்பாலிப்பது வழக்கம்.
கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படுபவர் கம்பர். ராமாயணக் காப்பியத்தைத் தமிழில் செய்து, இறவாப் புகழ் பெற்றவர். கம்பர், நரசிம்ம உபாசகர். கம்பர் என்ற சொல்லுக்கே கம்பத்திலிருந்து பிறந்தவர் என்ற பொருளும் உண்டு. அதனால்தான், ராமாயணக் காப்பியத்தினுள் நரசிம்ம அவதாரக் கதையினையும் சேர்த்து எழுதினார். அனுதினமும், நரசிம்மரை வழிபட்ட பின்னரே தன் பணிகளைத் தொடர்வார். ராமாயணக் காப்பியம் முழுவதும் எழுதி முடிக்கப்பட்ட பின்பு, அதை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார் கம்பர். ஆனால், திருவரங்கத்தில் அவ்வளவு எளிதாக அனுமதி பெறமுடியவில்லை. ‘தில்லைவாழ் தீட்சிதர்கள் ஒன்றாக சேர்ந்து அங்கீகரித்தால் மட்டுமே அந்த நூலை திருவரங்கத்தில் அரங்கேற்ற அனுமதிப்போம்’ என்று சொல்லி மறுத்தனர் திருவரங்க வைணவர்கள்.

கம்பர், தில்லை வந்தார். அங்கு வாழ்ந்த எல்லா தீட்சிதர்களையும் ஒன்று சேர்ப்பது எளிதான காரியமில்லை என்று சொல்லி அவரைத் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் மனம் உடைந்த கம்பர், தான் வழிபடும் யோக நரசிம்மர் ஆலயத்துக்குச் சென்று அவர் சந்நிதியில் அமர்ந்து வருத்தத்தோடு தியானம் செய்தார். உடனே அவர் மனதுள், `உடனே தில்லைக்குப் போ’ என்ற குரல் கேட்டது. சற்றும் தாமதியாமல் கம்பர் ராமாயண ஏடுகளோடு தில்லை கிளம்பினார்.

பெருமாள்

தில்லையில் எல்லா தீட்சிதர்களும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். காரணம் கேட்டபோது, `தில்லைக் கோயிலில் பணி செய்யும் பிரதான தீட்சிதர் ஒருவரின் மகன் பாம்பு தீண்டி இறந்துவிட்டதாகவும், எல்லோரும் அந்த வருத்தத்தில் இருப்பதால் இப்போது காவியம் எல்லாம் கேட்க முடியாது’ என்றும் சொல்லினர். உடனே கம்பர், அந்தச் சிறுவனின் உடலை எடுத்துவருமாறு கூறினார். தான் எழுதியிருந்த ராமாயணக் காப்பியம், நாகபாசப் படலத்திலிருந்து சில பாடல்களைப் பாடினார். அப்போது கருடன் வானில் பறந்து அதன் நிழல் சிறுவன் மேல் விழுந்தது. சிறுவனும் உறக்கத்தில் இருந்து எழுந்தவன்போல எழுந்தான். இதனால் மனம் மகிழ்ந்த தில்லைவாழ் தீட்சிதர்கள் கம்பரின் காவியத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றலாம் என்று சான்றளித்தனர். திருவரங்கத்தில் கம்பர் அரங்கேற்றம் செய்கையில், நரசிம்ம அவதாரப் பாடல்களை வாசித்தார். அதில், `திசைதிறந்து அண்டங்கீறி சிரித்தது செங்கட் சீயம்’ என்ற வரிகளைப் பாடியபோது அங்கிருந்த யோக நரசிம்மர் சிரிக்கும் சத்தம் கேட்டது. திருவரங்கத்து அந்தணர்கள் அஞ்சி நடுங்கி, கம்பரின் காப்பியம் முழுமையையும் ஏற்பதாகச் சொல்லி வணங்கினர்.

பானகம் நரசிம்மருக்குப் பிடித்த நைவேத்யம்… ஏன் தெரியுமா?

காப்பியகாலத்தில் மட்டுமல்ல, 17-ம் நூற்றாண்டில் பெரியதாசர் என்னும் பாகவதரைக் காக்க பகவான் பிரசன்னமான நிகழ்வும் உண்டு.
தஞ்சாவூரை ஆண்ட மன்னர்களின் ஒருவரான மன்னார் நாயுடு ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அந்தக் காலத்தில் அந்த ஊரில் பெரியசாமி என்கிற அடியவர் வாழ்ந்துவந்தார். நரசிம்ம உபாசகரான  இவரின் பக்தியின் மேன்மையை அறிந்த மக்கள் அவரை `பெரியதாசன்’ என்று அழைத்தனர்.

ஒரு நாள் மன்னன் அவையில் உள்ளோரிடம், “வைகுண்டம் இங்கிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?” என்று கேட்டார். அதைக் கேட்ட அவையோர், தங்களுக்குத் தெரியாது எனவும், ஒருவேளை பெரியதாசர் போன்ற மகான்களுக்குத் தெரிந்திருக்கலாம் என்றும் சொன்னார்கள். மன்னர் பெரியதாசரை அழைத்துவரச் சொன்னார். அவரிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அதற்குப் பெரியதாசர், “நான் வைகுண்டத்தைக் கண்டதில்லை. ஆனால், அது கூப்பிடு தூரத்தில்தான் இருக்க வேண்டும். காரணம், `ஆதிமூலமே’ என்று அழைத்ததும் பகவான் ஓடிவந்தான் என்றால் அது மிக அருகில் இருக்கும் இடமாகத்தானே இருக்க வேண்டும்” என்று பதில் சொன்னார். இதைக் கேட்ட மன்னன் மகிழ்ந்தான்.

பெரியதாசர் கவியியற்றுவதில் வல்லவர் என்பதை அறிந்து, தன்னைக் குறித்து ஒரு கவி பாடச் சொல்லிக் கேட்டான். ஆனால், ‘நரசிம்மரைப் பாடும் வாயால், நரன்களைப் பாடுவதில்லை’ என்று சொல்லி மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னன், பெரியதாசரைப் பலவாறு கொடுமைப் படுத்தினான். பிரகலாதனை இரண்யன் எவ்வாறெல்லாம் தண்டிக்க முயன்றானோ, அதேபோல் அத்தனை வழிகளிலும் அவரைத் துன்புறுத்தினார். எல்லா இடர்களிலிருந்தும் பகவான் அவரைக் காத்தார். இறுதியாக, பெரியதாசரைக் கழுவில் ஏற்ற உத்தரவிட்டார்.

பெருமாள்

இதுகாறும் பொறுத்திருந்த நரசிம்மமூர்த்தி, கோபம் கொண்டு மன்னன் முன் பிரசன்னமானார். நரஹரியின் ரூபத்தைக் கண்ட மன்னன் அஞ்சி நடுங்கினான். ஓடிச் சென்று கழுமரம் முன்பு நின்ற பெரியதாசரின் கால்களில் விழுந்து வணங்கி, தன்னை மன்னிக்குமாறு இறைஞ்சினான். பெரியதாசர் மன்னரை எழுப்பி, “எனக்குக் காட்சி தராத அந்த நரசிம்மர், உனக்குக் காட்சி கொடுத்தாரே, நீரே பாக்கியவான்” என்று சொல்லி அவர் கால்களில் விழுந்து வணங்கினார்.

துன்பங்களில் இருந்து உடனடியாக மீள, நரசிம்மரை பூஜை செய்வது மிகச் சிறந்த உபாயம் என்பர் பெரியோர். இன்று நரசிம்ம ஜயந்தி. நரசிம்மர் பிரசன்னமான இந்த நாளின் பிரதோஷ வேளையில் அவரைப் பூஜை செய்து, பானகம், நீர்மோர், தயிர்சாதம் ஆகியன நைவேத்தியம் செய்து வழிபட்டால், சகல பிரச்னைகளும் நீங்கி நன்மைகள் கிடைக்கும்.

Check Also

அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி …