Breaking News
Home / latest-update / சிவராத்திரி பூஜை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சிவராத்திரி பூஜை

சிவராத்திரி பூஜை

எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பரப்பிரம்மம் சிவபெருமான் ஆவார். பொதுவாக புண்ணிய காலங்கள் என்பது நமக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. இதுபோன்ற காலங்களில் நாம் செய்யும் சிறு புண்ணியம் கூட பெரிய பலன் தரும்.

அதுபோன்ற சிறப்பு மிகுந்த திருநாள் தான் சிவராத்திரி ஆகும். சிவராத்திரி தினத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை மகாசிவராத்திரி, மாதசிவராத்திரி, பட்ச சிவராத்திரி என்பதாகும்.

* மாத சிவராத்திரி என்பது மாதம் ஒரு முறையும்

* பட்ச சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் பட்சத்தில் மாற்றம் உடையதாய் அமைந்து இருக்கும்.

மகா சிவராத்திரி என்பது வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நிகழும் ஒன்றாகும். மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தி திதி கூடிய நாளில் வரும். இத்தகைய பெருமை வாய்ந்த சிவராத்திரி தோன்றிய இடம் திருவண்ணாமலை ஆகும்.

முன்பு ஒரு காலத்தில் இந்த அகில உலகத்திலும் யார் பெரியவர் என்று பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் சர்ச்சை மூண்டது. அதன் காரணத்தால் படைத்தல், காத்தல் தொழில் பாதிப்பு அடைந்தது. அவர்களுக்குள் போர் உண்டானது.

திருமால் கோபம்கொண்டு பிரம்மா மீது அநேக பாணங்கள் வீசினார். பிரம்மா அப்பாணங்களை தர்பையினால் அழித்தார். பின்னர் விஷ்ணு மீது பிரம்மா பாணங்களை பிரயோகம் செய்தார். இவற்றை விஷ்ணு சக்கராயுதத்தால் பொடியாக்கினார். இருவரும் தேவ வருடப்படி நூறாயிரம் ஆண்டுகள் சண்டை செய்தனர். முடிவில் விஷ்ணு சுதர்சன சக்கரத்தை பிரம்மா மீது ஏவ அந்த சுதர்சன சக்கரத்தை பிரம்மாஸ்திரத்தால் பிரம்மா அழித்தார்.

சுதர்சனம் பயனற்றதால் கோபம்கொண்ட விஷ்ணு, பிரம்மாவின் மீது பாசுபதாஸ்திரம் ஏவ, பிரம்மாவும் விஷ்ணு மீது பாசுபதாஸ்திரத்தை ஏவினார். இரண்டும் சம பலம் உடையதால் விஷ ஜுவாலையை கக்கின. உலகம் முழுவதும் துன்புற ரிஷிகளும், தேவர்களும் பரமசிவனை வேண்டினர். அப்பொழுது உலகை காக்கும் பொருட்டு ஈசன் இவர்களின் நடுவே தேஜோலிங்கமாய் அக்னிபிம்பமாய் காட்சி அளித்தார்.

இதை கண்ட இருவரும் ஓரு தீர்மானம் செய்தனர். யார் முதலில் அடியையும், முடியையும் காண்கிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்று தீர்மானம் செய்தனர். உடனே பிரம்ம தேவன் அன்னப்பறவை ரூபம் கொண்டு மேலே பறந்து சென்றார். ஜோதியின் முடியைத் தேடி சென்று ஆகாசத்தில் காணாமல் தவித்தார்.

விஷ்ணுவோ பெரிய வராக அவதாரம் எடுத்து பாதாளம் வரை சென்றார். ஜோதியின் அடியைக் காணாமல் திரும்பிவந்தார். அப்பொழுது பிரம்மதேவர் வழியில் சிவனது சடைமுடியிலிருந்து கீழிறங்கி வந்த தாழம்பூவைக் கண்டு தான் சிவனது முடியைக் கண்டதாக பொய்சாட்சி சொல்லுமாறு தாழம்பூவைக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க அவ்வாறே தாழம்பூவும் பொய் சாட்சி சொன்னது.

மறுகணமே அனல்மலை பட்டென்று வெடித்தது. வெடித்த ஓசையில் தேஜோலிங்கத்தில் இருந்த பரமசிவன் முப்புரத்தை எரித்த நகை முகத்துடனும், திருநீற்றால் வெளுத்த வடிவமுமாய் தோன்றினார். ஆணவத்தினால் பிரம்மதேவர் சொன்ன பொய் வார்த்தை கேட்டு சிவபெருமான் நகைத்த நேரத்தில் அண்டகிரகங்கள் எல்லாம் கிடுகிடுத்து நடுங்கிப் போயின.

தேவர்கள் எல்லோரும் பிரம்மன் இன்றே அழிந்து போனான் என்று அஞ்சினார்கள். பொய்யுரைத்த பிரம்மாவை நோக்கி உமக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாது என்றும், பொய்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். பிறகு லிங்கோத்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்தார். இந்த புராணத்தை நம்முடைய திருமுறைகளில் பல இடங்களில் காணலாம். திருஞான சம்பந்தர் தம் பதிகங்கள் அனைத்திலும் (மிகச்சிலபதிகங்கள் விதிவிலக்கு) ஒன்பதாவது பாடலில் அடிமுடி தேடலைக் குறிப்பிட்டுள்ளார்.

அப்பர், சுந்தரர், மணிவாசகர், திருமூலர் மற்றும் திருமுறை பாடிய பெருமக்கள் அனைவரும் இச்செய்தியைச் சுட்டிக் காட்டி ஒரு பாடலாவது பாடாமல் தங்கள் பணியை நிறைவு செய்யவில்லை எனலாம்.

சிவபெருமான், லிங்கோத்பவ மூர்த்தியாக தோன்றிய நாள்தான் சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை தலத்தில் தான் முதன்முதலாக சிவராத்திரி தோன்றியது என்பதால் அங்கு அபிஷேக, ஆராதனைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் காலை லிங்க மூர்த்திக்கு லட்ச்சார்ச்சனை நடைபெறும்.

பின் உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை முடித்து சிவராத்திரிக்கே உரித்தான நான்கு கால பூஜை நடைபெறும். முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம் காலம் என பூஜைகள் நடைபெறும். இதில் இரண்டாம் காலம், மூலவருக்கும், லிங்கோத் பவமூர்த்திக்கும் தாழம்பூ சாற்றுவது விசேஷம் ஆகும்.
சிவராத்திரியன்று யார் ஒருவர் பூஜைகள் செய்து, கண் வி-ழித்து, உண்ணாமல் இருந்து இம்மூன்றுடன் சிவராத்திரி விரதம் இருக்கின்றாரோ, அவர் சிவசாயுஜ்யம் அடைவார். எனவே சிவராத்திரி பூஜைகளும், விரதமும் வழிபாடும் முக்தியை அளிக்கும் சிறப்பு உடையது.

கிருத யுகத்தில் சிவபூஜையை சிவராத்திரி யன்று செய்து விநாயகர் சாயுஜ்யம் பெற்றார். த்ரேதாயுகத்தில் சுப்பிரமணியர் சிவராத்திரி பூஜை செய்து சாயுஜ்யம் பெற்றார். துவாபர யுகத்தில் திருமால் சிவராத்திரி அன்று சிவபூஜை செய்து சாயுஜ்யம் பெற்றார். இக்கலி யுகத்தில் உமா தேவியார் சிவராத்திரியில் சிவபூஜை செய்து சிவசாயுஜ்யம் அடைந்தார்.

சிவராத்திரி தினத்தில் தெரிந்தோ, தெரியாமலோ சிவநாமத்தையும், சிவ பூஜையும் செய்வோருக்கு, சிவலோக பிறவி கிடைக்கும் என்பது நிச்சயம். அப்படி கிடைத்த வரலாறும் உண்டு.

ஒரு வேடன் ஒரு சிவராத்திரி அன்று இரவு வேட்டைக்காக காடு சென்று ஒரு மரத்தின் மீது அமர்ந்து கொண்டு மிருகங்கள் ஏதாவது வருகின்றதா என விடிய, விடிய கண் விழித்துக் கொண்டே இருந்தான். பொழுதினைப் போக்க மரக்கிளையில் இருக்கும் தழைகளை உருவிக்கீழே போட்டுக்கொண்டே இருந்தான். அந்த வேடன் வீற்றிருந்த மரம் வில்வமரம். அவன் கீழே வில்வ இலைகளைப் போட்டது சிவலிங்கம் மீது. அந்த நாளே சிவராத்திரி.

அன்று உணவு இல்லாததால் பட்டினி கிடந்தான். மிருகம் தென்படாமையால் விழித்திருந்தான், பூஜை செய்தான். முதல் யாம பூஜை வேளையில் ஓர் ஆண் மான் வந்தது. அதன் மீது அம்பு போட முயற்சி செய்கையில் ஆண் மான் கூறியது, “வேடனே என் வீட்டில் பெண் மான் பூர்ண கர்ப்பமாய் உள்ளது. அதற்கு உணவளித்து வருகிறேன்” என்றது. வேடன் அம்மானை அனுப்பி வைத்தான்.

பிறகு ஓர் பெண் மான் வர அதைக்கொல்ல முயன்ற போது அது கூறியது, “எனது அன்னை நிறை மாத கர்ப்பமாய் உள்ளது. அதற்கு வேண்டிய பணிவிடை செய்து வருகின்றேன்” என்றது அதையும் அனுப்பி வைத்தான். இரண்டாம் யாம பூஜை சமயம், மூன்றாம் யாமம் கருவுற்ற மான் குட்டி போட்டது. நான்காம் யாமம் அம்மான் தன் குடும்பத்துடன் வேடன் முன் வந்தன. அவற்றைக் கண்ட வேடன் சிவராத்திரி பூஜை பலத்தால் ஞானம் அடைந்து அவற்றை கொல்லாது சத்தியத்தைக் காப்பாற்றியதால் விடுவித்தான்.

இதை வேடன் கூறியதும், சிவனார் தோன்றினார். “வேடனே! நீ செய்த சிவராத்திரி விரதத்தினால் நான் மிகவும் மகிழ்ந்தேன். விரும்பிய வரம் கேள்” என்றார். வேடனோ, “எனக்கு உங்கள் திருவடியே போதும்” என்றார். சிவனாரின் தரிசனத்தில் வேடன் ஜீவன் முக்தனானான். அறியாமலே இவ்விரதத்தைச் செய்த வேடன் முக்தியை பெற்றான். அறிந்த பக்தியுடன் இவ்விரதத்தைச் செய்வாரானால், அவர் முக்தியை பெறுவார் என்பதில் சொல்வதற்கு என்ன உள்ளது?

அனைத்து சாஸ்திரங்களும், தர்ம நெறி நூல்களும் சிவராத்திரி விரதத்தை போற்றி கூறுகிறது ஆகவே தன் பிறவிப் பயனை பெற விரும்பும் ஒவ்வொருவரும் மங்களமான சிவராத்திரி விரதத்தை, பூஜையை அனுஷ்டிக்க வேண்டும். இதனால் போகமும், மோட்சமும் கிட்டும்.

தொகுத்தவர்:

இளவரசுப் பட்டம் பி.டி.ஆர்.கோகுல் என்ற சேஷாத்திரி குருக்கள் : 9489564676
அருணாசலேஸ்வரர் தேவஸ்தானம்,
திருவண்ணாமலை

Check Also

ஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்

நொய்டாவில் ஹெல்மெட் அணியாததால் பஸ் டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து துறையின் செயலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். …